ஒரு மாதம் மற்றும் சில நாட்கள் கழித்து மீண்டும், முதல் பக்கம்! திரைப்படங்களில் பெரும்பான்மை காதலை சார்ந்தே எடுக்க காரணம்?? உலகத்தில் உள்ள உணர்ச்சிகளில், எவராலும் மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியாத , ஆனாலும் மிகவும் ஓர் அழகான உணர்ச்சி! காதலில் வென்றவருக்கும் சரி, தோற்றவருக்கும் சரி! சரிசமமாய் உன்னதமான அனுபவங்களை தருவது காதல்! அந்த வார்த்தையை உச்சரித்தாலே ஒரு அர்த்த புன்னகை வரும். வலிகளிலும் இன்பம் தரக்கூடிய ஒரே அற்புதம் "காதல்"! பூவே உனக்காக திரைப்படத்தின் ஒரு பாடல் வரி , "மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது ,சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் "
எனக்கு பிடித்த பாடல் வரிகளில், இதுவும் ஒன்று. இன்னுமொரு மிக பிடித்த வரி ,
மனதில் இத்தனை ரணமா ?, அட வலியில் இத்தனை சுகமா?? அடடா அடடா அடடா அடடா ...........
இன்று ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்டால், "காதல் தோல்வி " என்பதில் உள்ள நிலைப்பாடு எனக்கு தெரியாததுதான்! காதல் தோல்வி என்றால் என்ன ?? இருவர் மனப்பூர்வமாய் காதலித்து, பிறகு சில, பல காரணங்களால் பிரிவதா, இல்லை, ஒரு தலை ராகம் பாடி விட்டு, 'எனக்கும் காதல் தோல்வி ' என்று சொல்வதா??? சத்தியமாய் எனக்கு தெரியவில்லை! எனக்கும் இந்த வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் பீலிங் வந்திருக்கிறது ..... ஆனால் அது காதல் தான் என்று அடித்து சொல்லும் நிலைமையில் நான் அன்று இல்லை! அந்தளவு விவரமாகவும் நான் அன்று இல்லை ! சில நாட்களுக்கு முன் "அவளுக்கு கல்யாணமாம் !! என்ற செய்தி வந்தது . எனக்கு பத்திரிக்கை எல்லாம் வரவில்லை (வராது!). ஆனால் அன்று முதல் ஏதோ ஒரு சிறு நெருடல், ஏனென்று தெரியவில்லை .. யோசித்து யோசித்து , அன்று எனக்கு காதல் தான் வந்ததோ என்று நினைக்கையில், அவளுக்கு திருமணம் என்ற செய்தி முன்னே வந்து நிற்கிறது! அவளை பார்க்க வேண்டும் போலிருந்தது, இளமையை இணைக்கும் தளமான "ஓர்குட்டில்" தேடினேன்! அவளது முகப்புரை கிடைத்தது.... அதே புன்னைகையோடு புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தாள் .. கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டே இருந்தேன்.. நான் நாளை புதிய வேளையில் சேர போகும் நாளில், அவளுக்கு திருமணமாம்!!
நிஜமாய் என்னிலை தெரியாமல் தான், இதை எழுதி கொண்டிருக்கிறேன். இதை எழுதும் போதும் கூட இதுதான் காதல் என்று வரையுருத்து கூற முடியவில்லை!
அவளுக்கு கல்யாணம் ஆகிறதே என்று வருத்தபடவேல்லாம் இல்லை.. ஆனால் ....................................
எதையோ ஒன்றை இழந்து விட்டது போல் ஒரு நெருடல்..
இனம் புரியாத உணர்வுகளை, காரணமில்லாமல் தருவதா காதல்???
என் காதலே (?) என்னை என்ன செய்ய போகிறாய்??