Showing posts with label என் டைரி குறிப்பு. Show all posts
Showing posts with label என் டைரி குறிப்பு. Show all posts

Tuesday, December 25, 2012

மும்தாஜ் பாய் - நினைவஞ்சலி!

இப்போது திரும்பி பார்க்கையில் பள்ளிப்பருவம் என்பது பெரும்பாலானோர்க்கு ஒரு வசந்த காலம்!

சிறு வயது நண்பர்கள், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள் , குறும்பு தனங்கள், யாரையும்   புண்படுத்தாத சின்ன சின்ன தவறுகள், சிறு வயது அப்பா, அம்மா, பயமுறுத்தும் அதே நேரம் பாராட்டும் ஆசிரியர்கள், பள்ளியின் பக்கத்தில் மாங்காய், புளிப்பு மிட்டாய், இலந்தை பழம்  இத்யாதிகளை விற்கும் பாட்டி, முதல் சைக்கிள், ரேங்க் கார்ட், பேச்சு, ஓவியம் , கட்டுரை போட்டிகள், யூனிபார்ம், ஸ்கூல் பிரேயர்........ இவற்றோடு சில மனிதர்களும்...

அப்படி என் வாழ்வில் ஒரு மனிதர் தான் மும்தாஜ் பாய். அவர் இயற்பெயர் என்ன என்று இதுவரை  எனக்கு தெரியாது. ஆனாலும் அவருக்காக இதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. 

மும்தாஜ் பாய் எனக்கு அறிமுகம் ஆனது 1994 இல். என் அத்தை எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் தமிழாசிரியர். அவரால் நடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் விட்ட ஒரு காலத்தில், எங்களுக்கு அறிமுகம் ஆன ஆட்டோ ஓட்டுனர் மும்தாஜ் பாய். அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தாலும், அவரது பெண் என் அத்தையின் மாணவி என்பதாலும் அவளது பெயரே, அவள் தந்தையின் பெயராய் போனது. மும்தாஜ் பாய்!

பார்பதற்க்கு சிறிது குள்ளமாய், உருண்டையாய் கிட்டத்தட்ட நடிகர் ஹனீபா வை நினைவு படுத்தும் உருவம். உற்சாகமான மனிதர். தினமும் காலை 8:30 மணிக்கு - "டீச்சர்!!" என்னும் அவர் குரலும், "வந்துட்டேன் பாய்" என்கிற என் அத்தை குரலும் இன்னும் எனக்கு மறக்க வில்லை. எங்கள் வீட்டுக்கு உள்ளே வந்து எல்லாரிடமும் நன்றாய் பேசும் பழக்கம் அவருக்கு. நான் "சுஜேந்தர்" (சுரேந்தர்  என்ற பெயரில் 'ரே' வராது), என் தம்பி பாபு, என் அப்பா சார், என் அம்மா சிஸ்டர், அத்தை டீச்சர் - இப்படிதான் எல்லாரையும் அழைப்பார்.
அப்போது ப்ரண்ட் (Front) என்ஜின் ஆட்டோ வைத்திருந்தார். டிரைவர் சீட்டுக்கு அடியில் எஞ்சின் இருக்கும்.

1998 இல் நான் எழாவது படிக்கும் போது - எனக்கு இடது கையில் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டது. அது வரை நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நான், ஆட்டோவில் செல்ல ஆரம்பித்தேன். இணைப்பாக என் தம்பியும். எங்கள் குடியிருப்பில் உள்ள ஆட்டோ டிரைவர்களில் பொறுப்பாய் இருப்பவர் மும்தாஜ் பாய் என்பதால் அவரை அழைத்து பேசப்பட்டது.

"வேகமா போகாத பாய், பசங்கள பாத்து கொண்டு போய் விடு" - என்னும் அப்பாவின் குரலுக்கு, "ஆ ங் , நான் பாத்துக்கறேன் சார்" என்று சொல்லி எங்களை பார்த்து சிரித்தபடி , ஆட்டோவை ஸ்டார்ட் செய்வார். எனக்கு கை அதிரக்கூடாது என்பதற்காக அவ்வளவு பொறுமையாய் ஓட்டுவார். கிட்டதட்ட அந்த ஒன்றரை வருட பழக்கத்தில், தெருவில் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டாலே, மும்தாஜ் பாயின் ஆட்டோவை கண்டுகொள்ளும் திறன் எங்களுக்கு வந்து விட்டிருந்தது.

நான் சைக்கிள் பழகியது எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். "பையன் கீழே விழுந்துடுவான்" என்று சொல்லியே அது வரை எனக்கு சைக்கிள் சொல்லிதரபடவில்லை. எனக்கு சைக்கிள் பழக்கியது மும்தாஜ் பாய். அவர் பிடித்து கொள்ள, நான் ஓட்டி பழகினேன். பிறகு அவரை சைக்கிள் கேரியரில் வைத்து கொண்டு, எங்கள் வீட்டுக்கு பின்னால் உள்ள சிறு தொழில் பூங்காவில் ரவுண்டு அடித்திருக்கிறேன்.


ஒரு நாள், எனக்கு மூட் சரி இல்லாத போது அவர் ஏதோ சொல்லபோய் நான் ஏதோ புரிந்து கொண்டு, "இனிமே பாய் ஆட்டோல நா போ மாட்டேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டேன். என்னை விட 40 வயது பெரியவராய் இருந்தாலும், என்னிடம் கெஞ்சி கொண்டிருந்தார். "நான் அப்டி எல்லாம் சொல்லல சிஸ்டர்.. சின்ன பையன் ஏதோ கோவப்பட்டான், விடுங்க நான் பேசறேன்" - அவர் கண்ணில் முதன் முதலில் கண்ணீர் பார்த்த நாள்.

நாங்கள் முதலில் சைக்கிள் வாங்கியபோது, நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி  அடைந்தோமோ அந்த அளவுக்கு வருத்தம் அடைந்தவர் அல்லது அடைந்தது போல்  நடித்தவர் மும்தாஜ் பாய்."போடா டேய், மாசம் 400 ரூபா போச்சு டா, சைக்கிள் வாங்கிட்டீங்க, நீங்க வேலைக்கு வந்ததும் மாசம் 500 ரூபா எனக்கு தரனும்" - என்று உரிமையோடு கேட்பார். அவர் ஒரு அ.தி.மு.க  காரர். அவர் காலை வாருவது என் அப்பாவின் பொழுது போக்கு.. "எப்படி சொல்றார் பார் " என்று என்னை பார்த்து கேட்பார். எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் - எங்கள் அப்பாவின் அறையில்  உள்ள கண்ணாடியில் முகம் பார்த்து அங்கே இருக்கும் கோகுல் சாண்டல் பவுடரை போடும் வழக்கம் வைத்திருந்தார்.
அவருக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்று ஆசை, அவர் கற்று கொண்டவை இரண்டு, "ப்ளடி பூல்" , "வாட் நான் சென்ஸ் யு ஆர் டாக்கிங்".. அவர் இது ரெண்டும் உபயோகித்தால் உற்சாகமாய் இருக்கிறார் என்று அர்த்தம். பிறகு ஒரு நாள் என் அப்பா, "இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமாய்யா?" என்று கேட்டு சொன்னபோது - எனக்கு தெரியல சார் என்று வருத்தப்பட்டார்.

நான் பள்ளி முடித்து கல்லூரி சென்ற போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை குறைத்து விட்டிருந்தார். நான் எப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தாலும், என் சட்டை பைக்குள் கை விட்டு, காசு குட்றா என்பார்.. "இவன் வேஸ்ட் சார், உங்கள மாதிரி, காசே தரதில்ல, நமக்கு பாபு தான் ரைட்" - என்று என் தம்பியிடம் செல்வார். வேலைக்கு வந்தவுடன் அவருக்கு ஏதாவது  தர வேண்டும் என்று நினைத்து கொள்வேன். 

என் சித்தப்பா இறந்த போது கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்தது மும்தாஜ் பாய். நான் சித்தப்பா முகத்தை பார்க்க முடியவில்லை, தஞ்சாவூரில் இருந்து வருவதற்குள் எடுத்து விட்டிருந்தார்கள். அப்பாவுக்கு தெரியாமல், மாலை 6:30 மணிக்கு மயானத்திற்கு அழைத்து சென்றவர் பாய். - நல்ல உடம்பு  டா, முழுசா எரிஞ்சு போச்சு என்றார். அவை எல்லாம் இன்று கண் முன்னே வந்து செல்கின்றது.

எனக்கு வேலை கிடைத்த தகவலை அவருக்கு சொன்னவுடன், எந்த ஊர் டா, என்ன சம்பளம், மாசம் எனக்கு மாமூல் தரணும், மறந்துடாத என்று சிரித்து கொண்டே சொன்னார். நான் வேலையில் சேர்ந்த போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை முழுவதுமாய் நிறுத்தியிருந்தார். அவரை வீட்டுப்பக்கம் பார்க்க முடியவில்லை, ஒரு நாள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒரு செட் டிரஸ் எடுத்து தரவேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். 

போக முடியவில்லை என்பது பொய். சோம்பேறித்தனம் என்பதே உண்மை. நாளை போகலாம், நாளை மறுநாள், அடுத்த வாரம் என்று மூன்று வருடங்கள் கடந்து விட்டன.

போன வாரம் ஒரு நாள் காலை அப்பா என்னை மொபைலில் அழைத்து - "மும்தாஜ் பாய் போயாச்சு" என்ற போது என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில், அதற்கு முந்தைய நாள் தான் பாயை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். சாவுக்கும் நான் போகவில்லை.ஒரு குற்ற உணர்ச்சி என்னை குத்தி கொண்டே இருக்கிறது. ஒருவர் இருக்கிற போது அவர் அருகாமை பெரிதாய் தெரிவதில்லை என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லி போயிருக்கிறார் பாய்.

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

இனிமேல் நான் செய்ய விரும்புவது ஒன்றே! - ஒருவரை சந்திக்க வேண்டும்  அல்லது  அன்பு செலுத்த வேண்டும் என்று நினைத்து விட்டால் அதனை உடனே செய்ய வேண்டும். காலமும், உயிரும் அன்புக்காக காத்திருப்பதில்லை.

We must give importance to time when it comes to love..

என்றும் அன்புடன்,
சுரேந்திரா







Wednesday, July 8, 2009

என் காதலே(?) என்னை என்ன செய்ய போகிறாய் ?

ஒரு மாதம் மற்றும் சில நாட்கள் கழித்து மீண்டும், முதல் பக்கம்! திரைப்படங்களில் பெரும்பான்மை காதலை சார்ந்தே எடுக்க காரணம்?? உலகத்தில் உள்ள உணர்ச்சிகளில், எவராலும் மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியாத , ஆனாலும் மிகவும் ஓர் அழகான உணர்ச்சி! காதலில் வென்றவருக்கும் சரி, தோற்றவருக்கும் சரி! சரிசமமாய் உன்னதமான அனுபவங்களை தருவது காதல்! அந்த வார்த்தையை உச்சரித்தாலே ஒரு அர்த்த புன்னகை வரும். வலிகளிலும் இன்பம் தரக்கூடிய ஒரே அற்புதம் "காதல்"! பூவே உனக்காக திரைப்படத்தின் ஒரு பாடல் வரி ,

"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது ,சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் "

எனக்கு பிடித்த பாடல் வரிகளில், இதுவும் ஒன்று. இன்னுமொரு மிக பிடித்த வரி ,


மனதில் இத்தனை ரணமா ?, அட வலியில் இத்தனை சுகமா?? அடடா அடடா அடடா அடடா ...........

இன்று ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்டால், "காதல் தோல்வி " என்பதில் உள்ள நிலைப்பாடு எனக்கு தெரியாததுதான்! காதல் தோல்வி என்றால் என்ன ?? இருவர் மனப்பூர்வமாய் காதலித்து, பிறகு சில, பல காரணங்களால் பிரிவதா, இல்லை, ஒரு தலை ராகம் பாடி விட்டு, 'எனக்கும் காதல் தோல்வி ' என்று சொல்வதா??? சத்தியமாய் எனக்கு தெரியவில்லை! எனக்கும் இந்த வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் பீலிங் வந்திருக்கிறது ..... ஆனால் அது காதல் தான் என்று அடித்து சொல்லும் நிலைமையில் நான் அன்று இல்லை! அந்தளவு விவரமாகவும் நான் அன்று இல்லை ! சில நாட்களுக்கு முன் "அவளுக்கு கல்யாணமாம் !! என்ற செய்தி வந்தது . எனக்கு பத்திரிக்கை எல்லாம் வரவில்லை (வராது!). ஆனால் அன்று முதல் ஏதோ ஒரு சிறு நெருடல், ஏனென்று தெரியவில்லை .. யோசித்து யோசித்து , அன்று எனக்கு காதல் தான் வந்ததோ என்று நினைக்கையில், அவளுக்கு திருமணம் என்ற செய்தி முன்னே வந்து நிற்கிறது! அவளை பார்க்க வேண்டும் போலிருந்தது, இளமையை இணைக்கும் தளமான "ஓர்குட்டில்" தேடினேன்! அவளது முகப்புரை கிடைத்தது.... அதே புன்னைகையோடு புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தாள் .. கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டே இருந்தேன்.. நான் நாளை புதிய வேளையில் சேர போகும் நாளில், அவளுக்கு திருமணமாம்!!


நிஜமாய் என்னிலை தெரியாமல் தான், இதை எழுதி கொண்டிருக்கிறேன். இதை எழுதும் போதும் கூட இதுதான் காதல் என்று வரையுருத்து கூற முடியவில்லை!


அவளுக்கு கல்யாணம் ஆகிறதே என்று வருத்தபடவேல்லாம் இல்லை.. ஆனால் ....................................

எதையோ ஒன்றை இழந்து விட்டது போல் ஒரு நெருடல்..


இனம் புரியாத உணர்வுகளை, காரணமில்லாமல் தருவதா காதல்???


என் காதலே (?) என்னை என்ன செய்ய போகிறாய்??

Thursday, May 14, 2009

மிஸ்டர். பொதுஜனம்



இன்று மாலை , என் தங்கை வீட்டுக்கு போய் விட்டு, வீடு திரும்ப , அசோக் பில்லரில் நின்று கொண்டிருந்தேன்! சென்னை பேருந்துகள், என் நேரத்துக்கு எப்போதும் வந்ததில்லை. ஒன்று நான் தாமதம், இல்லாவிட்டால் பேருந்து தாமதமாக வரும். இன்றும் அதே போல், பேருந்து ஒன்றும் இல்லை, அதனால் நின்று கொண்டிருந்தேன். அப்போது , ஒரு ஜோடி, பைக்கில் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னை தடுத்த காரை, லாவகமாக "சைடு" எடுத்த அந்த பைக் ஓட்டி, எதிரே வந்த ஆட்டோவை பார்க்கவில்லை. ஆனால், ஆட்டோமேலல்லாம் அவன் இடிக்க வில்லை, சாமார்த்தியமாக வண்டியை திருப்பிவிட்டான்!
ஆட்டோகாரன் சும்மா இருக்கவில்லை! "ஏண்டா, தே......யா பையா, நீ சாவ என் வண்டிதான் கெடச்சுதா?" . பைக் ஓட்டிக்கு இது பயங்கரமாய் சுட்டிருக்கவேண்டும் ! அப்படியே வண்டியை திருப்பி, ஆட்டோவிடம் வந்து, அந்த ஆட்டோகாரனை, கழுத்தை பிடித்து வெளியே இழுத்து, கீழே தள்ளி முகத்திலேயே மிதிக்க ஆரம்பித்தான். ஆட்டோகாரனும் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரத்தில் அங்கே கூட்டம் கூடி, ஆளாளுக்கு என்னாச்சு, என்னாச்சு என்று பேச தொடங்கினார்கள். பைக் ஓட்டி கூட வந்த பெண்ணும், கொஞ்ச நேரம் அவனை தடுத்து பார்த்தாள். பிறகு "இது வேலைக்கு ஆவாது" என்று அவளும் தூர போய் நின்று கொண்டாள். யாரோ ஒருவர் வந்து, விழுந்திருந்த பைக்கை நிமிர்த்திவைத்தார்.

என்னிடம் ஒருவர், "அங்க என்னாச்சு, 49 A பஸ் வருமா?", எனக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பொதுவாக , "தெரியல சார்" என்று சொல்லி வைத்தேன்.

"என்ன மனுஷா இவாளெல்லாம், இப்படி அடிச்சுக்கறா?", ஒரு கைத்தடி என்னிடம் வருத்தப்பட்டது.

"பின்னாடி பிகர் இருந்தா இப்படி தான் சீன் போடுவானுங்க," என்று இரண்டு
பேர், அங்கே இருந்தவள் தங்கையா, காதலியா என்று தெரியாமல் கூட பேசிகொண்டார்கள்!

நான் என்ன பண்ணிகொண்டிருந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்?

என்னுள் இருந்த "வேடிக்கை பார்க்கும்" சராசரி இந்தியனை நினைத்து கொண்டே
11 H
ஏறி வீடு வந்து சேர்ந்தேன்!





Friday, April 17, 2009

வானம்பாடி!!

கிட்ட தட்ட ஆறு மாத காலம்! எழுத நினைத்து எல்லாம் 'படிவங்களாக' சேமித்து வைத்து பின்பு ஏனோ மனமில்லாமல் எழுதாமல் விட்டு இதோ இன்று மீண்டும்! இன்று என் மனது மிகவும் லேசாக உள்ளதாக உணர்கிறேன்!

நிறைய நாட்கள் கழித்து என் தனிமையை நேற்று மிகவும் விரும்பி ரசித்தேன்! வேலையை விட்டு ஒரு வார காலம்! எங்கேயும் போகவில்லை! வீட்டிற்குள்ளேயே இருந்தேன்! நேற்று எங்காவது போக வேண்டும்.. நானும் என் தனிமையும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கிளம்பினேன். எங்கே போகலாம்?? தெரியவில்லை.... ஆனால் போக வேண்டும்! கையில் எவ்வளவு பணம் இருந்தது?? நினைவில்லை!!

முகம் கழுவினேன்! சட்டையில் வியர்வை நாற்றம் வீசியது. மாற்று சட்டை தேடினேன். கிடைக்கவில்லை! கையில் கிடைத்த 'திரவியத்தை' அடித்து கொண்டேன்! நாற்றம் வெளியே தெரியவில்லை! கிளம்பிவிட்டேன் .... என் தனிமையை தேடி!!

காற்றை ஆழமாக சுவாசித்தபடி தெருவில் இறங்கி நடந்தேன்! பேருந்து நிறுத்தம்! மக்கள் அனைவரும் தத்தம் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் சமயம். எல்லாரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.. என்னை தவிர அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை இருந்தது! உலகத்தின் முதல் பார்வையாளனாய் என்னை நினைத்து கொண்டு பார்த்து கொண்டிருந்தேன்!

ஒரு பெண்மணி தன் வீட்டு நிகழ்ச்சிக்காக பூக்கள் கொடுக்க மறந்த பூக்காரியை திட்டி கொண்டிருந்தாள்! சில மாதங்கள் முன்னால் பிறந்த ஒரு குழந்தையை, ஓர் இளமையான தாய், நடை வண்டியில் தள்ளிக்கொண்டே வந்து வேடிக்கை காட்டிகொண்டிருந்தாள். சூடாக கீரை வடை போட்டிருந்த கடையில்,பெரியவர் ஓருவர் முட்டி மோதி தன் வடையினை வாங்க காசு நீட்டி கொண்டிருந்தார்! அவர் முகம் ஒரு குழந்தையினை போல அந்த வடைகளை பார்த்து கொண்டிருந்தது!


தூரத்தில் பேருந்து வெளிச்சம் என் கண்ணை கூசியது. பார்வையாளன் உலகத்தில் இருந்து சற்று நேரம் வெளியே வந்தேன். '11 H' என்ற எண்ணை சுமந்து கொண்டு அந்த பேருந்து என்னருகே வந்து நின்றது. கூட்டம் அவ்வளவாக இல்லை! எனக்கு அமர இருக்கை இருந்தது. அது கடற்கரைக்கு செல்லும் பேருந்து. ஏறிக்கொண்டேன்! " மெரினா பீச் ஒண்ணு". நடத்துனர் " சார், இன்னைக்கு அரங்கத்துல அரசியல் கூட்டம், பஸ் போகுமா தெரியாது! எங்க நிக்குதோ அங்க இறங்கிகோங்க",
பலருக்கு அது சலிப்பை தந்தது! "இந்த கட்சிங்க இப்படி தான் சார், கூட்டம் போடுறேன்னு இருக்கரவனுகெல்லாம் எடஞ்சல் குடுப்பானுங்க", முகம் தெரியாத ஒருவரிடம் புலம்பிக்கொண்டு இருந்தார். எனக்கு அது பெரிய மாற்றத்தை தரவில்லை. பேருந்து எங்கே நிற்கிறதோ அங்கே இறங்கி கொள்ளலாம் என்று உட்கார்ந்து கொண்டேன்.

சென்னை மாநகரம்! மாலை நேரத்தில் விளக்குகளால் தன்னை அலங்கரித்து கொண்டிருந்தது! தி நகர் , பனகல் பார்க் , தேனாம்பேட்டை.... பேருந்து சென்று கொண்டிருந்தது! எல்லா கடைகளிலும் ஓர் பணக்காரத்தனம்! காசு இல்லாதவன் இங்கே வந்தால், கடவுளாக இருந்தாலும் உள்ளே வர முடியாது!
என்னதான் "Recession, Inflation, Liquidity" என்று பொருளாதார கோட்பாடுகள் நாட்டை ஆட்டிபடைத்து கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாரிடத்திலும் பணம் இருப்பதாகவே தோன்றுகிறது! ஒரு சட்டை எடுத்தால், இரண்டாயிரம்! புடவை?? கேட்கவே வேண்டாம்.. 5000 - 100000 வரை! ஒரு சாமானியன் நினைத்தால் இதெல்லாம் வாங்க முடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டிப்பாக இல்லை! "Egyptian Pyramids, Bermuda Triangle" போன்ற ஆச்சர்ய கேள்விகளோடு இந்த கேள்வியையும் சேர்த்து கொள்ளலாம்!!

அண்ணா சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்போது பேருந்தில் கூட்டம் ஓரளவு நிறைந்திருந்தது. TVS பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்மணியும் , அவர் மகனும் ஏறினர். "அம்மா, எவ்ளோ நேரம் அப்புறம் பஸ் கெடச்சுது, இல்ல மா?? ". அந்த சிறுவனின் கேள்விக்கு அந்த அம்மா சிரித்து கொண்டே ஆமோதித்தார். நிறைய கேள்விகள் கேட்டு கொண்டே வந்தான்! வியர்வை பூத்த சட்டையில் இருந்த நடத்துனரும், அந்த சிறுவனோடு உற்சாகம் ஆகி பேசிகொண்டிருந்தார். நெருக்கம் தந்த இறுக்க நிலையை அந்த சிறுவன் போக்கி விட்டிருந்தான்! நல்ல வேளையாக பேருந்து கடற்கரை வழியாகவே சென்றது. கட்சி கொடிகளும், கரை வேட்டிகளை தவிர அங்கே பெரியதொரு கூட்டம் நடப்பதாகவே தெரியவில்லை.. பேருந்தை விட்டு இறங்கினேன். நான் அமர்ந்திருந்த இருக்கையில் அந்த சிறுவன் அமர்ந்து கொண்டான். என்னை பார்த்து சிரித்தான். நானும் சிரித்து விட்டு இறங்கி விட்டேன்.

சாலையை கடக்க வேண்டும்.. காற்றில் மீன் வாசம் லேசாக வீசிக்கொண்டு இருந்தது. போக்குவரத்து அதிகமாகவே இருந்தது! சீக்கிரம் கடற்கரைக்கு போக வேண்டும் என்று இருந்தது. "சுரங்க வழி பாதை" என்று போட்டிருந்த படிகளில் இறங்கி நடந்தேன். அதற்குள்ளும் ஒரு உலகம் இயங்கி கொண்டு இருந்தது. "ஆங்கில படங்கள், பாடல்கள் விற்று கொண்டிருந்தார்கள். இரண்டு தேநீர் கடைகள், ஒரு ஐஸ் கிரீம் கடை இருந்தது! மேலே செல்லும் படிகளில் ஏறினேன்! இதோ என் முன்னால் கடற்கரை! இரு பக்கங்களிலும் பல்வேறு கடைகள்.. பெண்கள் அழகு சாதன பொருட்கள், வறுவல், சோளம் என்று விதம் விதமாய் கடைகள்!! ஆசை தீர மணலில் நடந்தேன்! குளிர்ந்த காற்று முகத்தில் வீசியது!

குதூகலமாய் குடும்பங்களோடு சிலர், கணவன் மனைவியுமாய் தம் குடும்ப நிகழ்வுகளை தனிமையில் பகிந்துகொள்ளும் சிலர், கடற்கரை என்றாலே காதல்களுக்கு குத்தகை எடுத்துகொண்டது போல் காதலர்கள், தனிமையில் சிலர்... அனைவருக்காகவும் ஏதோ சிலவற்றை விற்றுக்கொண்டு பலர்!! கடற்கரை எல்லாராலும் நிறைந்திருந்தது....... நான் நடந்து செல்லும் போது தன் காதலியின் மடியில் படுத்திருந்த ஒருவன் என்னை முறைத்து பார்த்தான்! அவர்கள் அருகில் நடந்து செல்வது, அவர் சுதந்திரத்தை பறிப்பதாக அவன் உணர்ந்திருக்கலாம்.. தெரியவில்லை! எனக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது என் அலை பேசி மணி அடித்தது! எடுத்தேன்!

" Am I speaking with Surendar?" . "Yes". " Surendar.. This is ****** from HR, due to your long absence to the company, you cannot continue with us. I just called you to inform this" . "Thank you Mr.HR"

மிக சுதந்திரமாய் உணர்ந்தேன்! உலகம் உறங்கும் வேளையில் எழுந்து குளித்து வேலைக்கு செல்ல வேண்டியிருந்த அந்த வேலை எனக்கு பிடிக்காமல் இல்லை! ஆனால் மனித உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்கள் அங்கு இல்லை! அந்த அடிமை தனம் எனக்கு பிடிக்க வில்லை! வேலையை விட்டுவிட்டேன்!!! இன்று அதற்கான அதிகாரபூர்வ விடுதலை கிடைத்து விட்டது! எனக்கு மகிழ்ச்சியே!

ஏதோ ஒரு சின்னஞ்சிறு சிறுவனை போல் பார்த்ததை சாப்பிட வேண்டும் போல் இருந்தது! சமோசா பூரி, எண்ணையில் பொங்கி பொன்னிறத்தில் பூத்திருந்த பஜ்ஜிகள்.. அனைத்தையும் சாப்பிட்டேன்!
செருப்பை கழற்றிவிட்டு கடலை பார்த்து கொண்டே அமர்ந்தேன்! அலைகள் ஒன்றோடுன்று உரசி விளையாடி கொண்டிருந்தன. நினைத்து பார்த்தால், அலைகளுக்கு அலுப்பே ஏற்படுவது இல்லை! வருடம் முழுதும் விளையாடி கொண்டே இருக்கின்றன. கார்மேகத்தை கண்ட மயில்கள் போல, நிலவை பார்த்தால் அலைகளுக்கு உற்சாகம் "அலை" மோதும். அலைகளை பார்க்க எனக்கு பொறாமை ஏற்பட்டது. மனிதர்களும் எப்போதும் இப்படி உற்சாகமாய் காணப்பட்டால்??

என் மனதில் இப்போது எந்த உணர்வுகளும் இல்லை. கோபம், பசி, வெறுப்பு, மகிழ்ச்சி என்று எதுவுமே இல்லை. அமைதியான வெறுமை இருந்தது! அலைகளை ரசித்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்! என் மேலே விமானம் ஒன்று மின்னிடும் விளக்குகளோடு பறந்து போனது!
நான் அதில் என்றேனும் போவேனா?? தெரிய வில்லை.. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை!

மீண்டும் எழுந்து மணலை தட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என்னுள்ளே ஏதோ ஒரு குதூகலம்! எனக்கு பிடித்த பாடலை சத்தமாக பாடிக்கொண்டே நடந்தேன்! தூரத்தில் ஒரு ஐஸ் கிரீம் கடை தெரிந்தது! எனக்குள் இருந்த சிறுவன் மீண்டும் எட்டி பார்த்தான்! வேகமாக சென்று, கையில் இருந்த காசுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கிவிட்டேன்! வீட்டிற்கு திரும்ப, பேருந்துக்கு காசு வேண்டும் என்ற நினைப்பில்லை.. சட்டையில், பர்சில் இருந்த சில்லறையை எண்ணி பார்த்தேன். பத்து ருபாய் தேறியது! போதும்!!

கடற்கரையை விட்டு வெளியே பேருந்து நிறுத்தம் வந்தேன். மீண்டும் பரபரப்பாய் மக்கள்! சீக்கிரம் வேறு எங்கேனும் போக வேண்டும் என்று தோன்றியது. அங்கே இருந்த கம்பி தடுப்பில் அமர்ந்துகொண்டேன். பேருந்து வருமென தெரியவில்லை. வந்த ஒரு பேருந்தும், நிறுத்தாமல் போய் விட்டான்! சிறிது தூரம் நடக்கலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன். எதிரில் 'SBI ATM' என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு ஓரமாய் என்னை போல் தனிமையை விரும்புவது போல் அமைக்கப்பட்டிருந்தது. காப்பாளர் அரை தூக்கத்தில் இருந்தார். ஏ சி குளிரில் அறை உறைந்திருந்தது. உள்ளே நுழைந்தேன்! அங்கே ஒரு பெரியவர் பணம் எடுக்க தெரியாமல் திணறி கொண்டிருந்தார்! என்னை பார்த்தும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி! அவருக்கு பணம் எடுத்து கொடுத்தேன்!! என்னமோ அவருக்கு ஒரு பெரிய உதவியை செய்து விட்டது போல் எனக்கு ஒரு நினைப்பு!! பெருமையாய் உணர்ந்தேன்..

நடக்க ஆரம்பித்தேன் மறுபடியும்! அடுத்த பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் அமர்ந்தேன்!! என் பின்னால் இருவர், பொது இடத்தில் அமர்ந்து குடித்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்க பிடிக்கவில்லை! மீண்டும் நடந்தேன்!! நான் சரியான திசையில் தான் போகிறேனா.. எதுவும் தெரிய வில்லை.. ஆனால் நடக்க பிடித்திருந்தது.. அடுத்த பேருந்து நிறுத்தம்!! மீண்டும் நடை!! அடுத்தது....
நேரமும் ஓடி கொண்டிருந்தது!! பேருந்தோ வருவதாய் தெரியவில்லை...

ஒரு 'கோக்' டின் வாங்கி கொண்டேன். ஒரு ஆட்டோ வில் ஏறி கொண்டேன். பேரம் பேசவில்லை!! கால்களை நீட்டி அமர்ந்தேன்!! நல்ல வேகத்தில் ஆட்டோ சென்றது... கோக் ஐ ரசித்து குடித்தேன்!! தானாக சிரித்து கொண்டேன்! அடுத்த இருபது நிமிடங்களில் வீடு வந்து விட்டிருந்தது.. ஆட்டோ விற்கு பணம் கொடுத்து விட்டு இறங்கினேன்.. கோக் டின்னை உற்சாகமாய் உதைத்தேன்..... வீட்டின் இரும்பு கதவை திறந்தேன்...
உள்ளே போக மனம் இல்லை ..
பின்னால் வந்து பார்த்தேன். நான் உதைத்த அந்த கோக் டின் அங்கேயே ஆடி கொண்டிருந்தது.