
இன்று மாலை , என் தங்கை வீட்டுக்கு போய் விட்டு, வீடு திரும்ப , அசோக் பில்லரில் நின்று கொண்டிருந்தேன்! சென்னை பேருந்துகள், என் நேரத்துக்கு எப்போதும் வந்ததில்லை. ஒன்று நான் தாமதம், இல்லாவிட்டால் பேருந்து தாமதமாக வரும். இன்றும் அதே போல், பேருந்து ஒன்றும் இல்லை, அதனால் நின்று கொண்டிருந்தேன். அப்போது , ஒரு ஜோடி, பைக்கில் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னை தடுத்த காரை, லாவகமாக "சைடு" எடுத்த அந்த பைக் ஓட்டி, எதிரே வந்த ஆட்டோவை பார்க்கவில்லை. ஆனால், ஆட்டோமேலல்லாம் அவன் இடிக்க வில்லை, சாமார்த்தியமாக வண்டியை திருப்பிவிட்டான்!
ஆட்டோகாரன் சும்மா இருக்கவில்லை! "ஏண்டா, தே......யா பையா, நீ சாவ என் வண்டிதான் கெடச்சுதா?" . பைக் ஓட்டிக்கு இது பயங்கரமாய் சுட்டிருக்கவேண்டும் ! அப்படியே வண்டியை திருப்பி, ஆட்டோவிடம் வந்து, அந்த ஆட்டோகாரனை, கழுத்தை பிடித்து வெளியே இழுத்து, கீழே தள்ளி முகத்திலேயே மிதிக்க ஆரம்பித்தான். ஆட்டோகாரனும் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரத்தில் அங்கே கூட்டம் கூடி, ஆளாளுக்கு என்னாச்சு, என்னாச்சு என்று பேச தொடங்கினார்கள். பைக் ஓட்டி கூட வந்த பெண்ணும், கொஞ்ச நேரம் அவனை தடுத்து பார்த்தாள். பிறகு "இது வேலைக்கு ஆவாது" என்று அவளும் தூர போய் நின்று கொண்டாள். யாரோ ஒருவர் வந்து, விழுந்திருந்த பைக்கை நிமிர்த்திவைத்தார்.
என்னிடம் ஒருவர், "அங்க என்னாச்சு, 49 A பஸ் வருமா?", எனக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பொதுவாக , "தெரியல சார்" என்று சொல்லி வைத்தேன்.
"என்ன மனுஷா இவாளெல்லாம், இப்படி அடிச்சுக்கறா?", ஒரு கைத்தடி என்னிடம் வருத்தப்பட்டது.
"பின்னாடி பிகர் இருந்தா இப்படி தான் சீன் போடுவானுங்க," என்று இரண்டு பேர், அங்கே இருந்தவள் தங்கையா, காதலியா என்று தெரியாமல் கூட பேசிகொண்டார்கள்!
நான் என்ன பண்ணிகொண்டிருந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்?
என்னுள் இருந்த "வேடிக்கை பார்க்கும்" சராசரி இந்தியனை நினைத்து கொண்டே 11 H
ஏறி வீடு வந்து சேர்ந்தேன்!
1 comment:
பொது ஜனம் என்பதற்கு பதில், பொது மகன் என்று இருக்கலாமே...
எதற்கு பிற மொழி கலப்பு....?
Post a Comment