Tuesday, May 5, 2009

கோடம்பாக்கம் ரயில் நிலையம்





தேதி
: 30-02-2009 நேரம்: 07:43:25 , 26 , 27 PM ........




கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடை மேடையின் மூன்றாவது சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். எனக்கு இருபத்தி இரண்டு வயது. அடித்து பிடித்து பொறியியல் பாஸ் செய்து, இரண்டு மூன்று காதல் தோல்விகளோடு கல்லூரி விட்டு வெளியே வந்து, பெயர் தெரியாத ஒரு மென்பொருள் நிறுவனத்தில் எட்டாயிரம் சம்பளத்தில் குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன். இதில் ஆட்குறைப்பு என்று பயமுறுத்தல் வேறு! உயரியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் தங்கை, காது ஆபரேஷன் என்று காத்து கொண்டிருக்கும் அம்மா, வாழ்க்கையே பிடிமானம் இல்லாமல் இருந்தது. நன்றாக சிரித்து நான்கு மாதங்கள் இருக்கும் என்று நினைத்த படியே அமர்ந்திருந்த போதுதான் அவரை பார்த்தேன்!

அவருக்கு அறுபது வயது இருக்கலாம். அவர் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. என்னவோ சாதித்து விட்ட ஒரு குதூகலம்! காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்திருந்தார். அவரை யார் யார் பார்த்தார்களோ தெரியவில்லை, ஆனால் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி சிரித்துகொண்டிருந்தார். கையில் ஸ்டேஷன் மாஸ்டர் போல் பச்சை கொடி, சிவப்பு கொடி வைத்திருந்தார்.

"ரைம்ஸ் சொல்லு டா , செல்லம் ல சொல்லு டா !" என்று தன் மூன்று வயது மகனிடம் கெஞ்சி கொண்டிருந்த அம்மாவின் அருகில் வந்து நின்றார் . அந்த குழந்தையை பார்த்து , கையை காலை தூக்கி, நடனம் போல்

""Down by the station
Early in the morning,
See the little puffer bellies
All in a row!
Puff Puff Toot toot
Off we go!!""

என்று பாடு பாடி ஆட ஆரம்பித்து விட்டார். அவர் செய்கை எல்லாருக்கும் புதியதாய் , பைத்தியகாரதனமாய் தோன்றி இருக்கலாம். அந்த குழந்தை மேலும் அழத்தொடங்கியது. அதன் தலையில் தட்டிய வாறே சிரித்து சென்றார்.

அன்றைய தின நாளிதழை படித்து கொண்டிருந்த ஒருவரின் பின்னால் நின்று எட்டி பார்த்து படித்து விட்டு, தன்னால் சிரித்து கொண்டார். எனக்கு அவர் செய்கை வித்யாசமாய், சிரிப்பை தந்தது. இத்தனை வயதிலும் இப்படி குழந்தை மாதிரி மகிழ்ச்சியாக இருக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது?? அவரை கேட்டே ஆகவேண்டும்.

"சார், என் பேரு வேணு. இங்க தான், G.N. Chetty ரோடு எனக்கு ஆபீஸ்,". அதுக்கு? என்பது போல் அவர் பார்வை என்னை பார்த்தது. "நானும் உங்கள வந்ததுல இருந்து பாக்கறேன், உங்களால மட்டும் எப்படி சார், இவ்வளோ சந்தோஷமா இருக்க முடியுது?" மறுபடியும் கேனத்தனமான அந்த சிரிப்பு!

"டேய் பையா," , அவர் "பையா" என்றது "பியா" என்று சொல்வது போல் இருந்தது. முதல் சந்திப்பிலேயே "டேய்" போட்டது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
"திருக்குறள் படிச்சிருக்கியா நீ "? "இடுக்கண் வருங்கால் நகுக, அப்படினாஎன்னனு தெரியுமா?" டெஸ்கார்டெஸ் பத்தி தெரியுமா?, சார்லி சாப்ளின் - வாழ்க்கை சரிதம் படிச்சிருக்கியா?". அவர் கேள்விகள் கேட்டது எனக்கு எரிச்சலாய் வந்தது! " சார், எனக்கு அதெல்லாம் தெரியாது, படிச்சதில்ல".
"அப்ப நீ சந்தோஷமா இருக்க முடியாது". எனக்காக அவர் நிற்கவில்லை. போய்கொண்டே இருந்தார். " சார் , சார் , ஒரு நிமிஷம், என்ன சார் இப்படி சம்பந்தமேஇல்லாம பேசிட்டு போறீங்க ?" , நான்.

"டேய் பியா, வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஏதோ ஒரு விதத்துல சம்பந்தம்இருக்கு. சம்பந்தம் இல்லாம எதுமே நடக்கிறது இல்ல. நீ சந்தோஷமாஇருக்கணும்னா , மத்தவங்கள சந்தோஷ படுத்து! உன்ன சுத்தி இருக்கறவங்கசந்தோஷமா இருந்தா, அந்த "vibes" உன்னையும் சந்தோஷமா வச்சிருக்கும். புரிஞ்சுதோ ?"

எனக்கு புரிந்ததோ தெரியவில்லை, தலையை மட்டும் ஆட்டிக்கொண்டேன். அப்போதுதான் அங்கே வித்யாசமாய் ஒரு நிகழ்வு நடந்தது. என் கண் முன்னே, அந்த பெரியவர் காற்றிலே கரைந்து போய் கொண்டிருந்தார்!, கரையும் அந்த உடலுக்கு பின்னால், சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் தெரிய தொடங்கின!

" கண்ணீர் அஞ்சலி "
எங்கள் குறைகளை உங்கள் போராட்டத்தால் , தமிழக அரசின் காதுகளில் விழச்செய்து எங்களுக்கு வெற்றி தேடி தந்த தெய்வமே! உங்கள் பிரிவால் என்றும்வாடும் ,
SRMU தொழிலாளிகள் சங்கம், கோடம்பாக்கம்.

சண்முகநாதன்
தலைவர், SRMU
தோற்றம் : 12-12-1952 மறைவு: 28-02-2009

புகைப்படத்தில் சண்முகநாதன் என்ற பெயரை கொண்டிருந்த அந்த பெரியவர் சிரித்துகொண்டிருந்தார்!

அதிர்ச்சியில் என் ரத்தம் உறைந்து கொண்டு இருந்தது! என் கால்கள் நடுங்கிகொண்டு இருந்தன! தலையில் வியர்வை பெருக்கு ஆறாய் ஓடியது....
"தண்ணி, , தண்.... " . பேசுவதற்கு வரவில்லை. தலை கனத்தது! சுற்றியது! அம்மா, தங்கை இருவரும் கண்ணுக்கு முன்னே தெரிந்தார்கள். அங்கேயே மயங்கி விழுந்தேன்..................................................................................................





"வேலை பறிக்கப்பட்டதால், மென்பொருள் பொறியாளர், கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை" : அங்கே காற்றில் ஆடி கொண்டிருந்த இரண்டு நாள் முந்தைய செய்தி தாளை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை!

"சம்பந்தம் இல்லாம எதுமே நடக்கிறது இல்ல...................".. காற்றில் அந்த குரல் மட்டும் எங்கேயோ கேட்டு கொண்டே இருந்தது.





2 comments:

Cable சங்கர் said...

பாஸ், கதை அருமையாய் இருக்கிறது... ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.. அது சாப்ட்வேர் இளைஞன் இறந்ததினால் அவர் கண்ணுக்கு தெரிந்தானா அல்லது.. இறந்தவன் வேறொருவனா..?

சுரேந்திரா said...

இருவருமே இறந்தவர்கள்! அதனால் தான் ஒருவர் கண்ணுக்கு மற்றொருவரால் தெரிய முடிந்தது. சையன்ஸ் பிக்ஷன் எழுதணும்னு ஆசை, இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!