Tuesday, December 25, 2012

மும்தாஜ் பாய் - நினைவஞ்சலி!

இப்போது திரும்பி பார்க்கையில் பள்ளிப்பருவம் என்பது பெரும்பாலானோர்க்கு ஒரு வசந்த காலம்!

சிறு வயது நண்பர்கள், அவர்களுடன் விளையாடிய விளையாட்டுக்கள் , குறும்பு தனங்கள், யாரையும்   புண்படுத்தாத சின்ன சின்ன தவறுகள், சிறு வயது அப்பா, அம்மா, பயமுறுத்தும் அதே நேரம் பாராட்டும் ஆசிரியர்கள், பள்ளியின் பக்கத்தில் மாங்காய், புளிப்பு மிட்டாய், இலந்தை பழம்  இத்யாதிகளை விற்கும் பாட்டி, முதல் சைக்கிள், ரேங்க் கார்ட், பேச்சு, ஓவியம் , கட்டுரை போட்டிகள், யூனிபார்ம், ஸ்கூல் பிரேயர்........ இவற்றோடு சில மனிதர்களும்...

அப்படி என் வாழ்வில் ஒரு மனிதர் தான் மும்தாஜ் பாய். அவர் இயற்பெயர் என்ன என்று இதுவரை  எனக்கு தெரியாது. ஆனாலும் அவருக்காக இதை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. 

மும்தாஜ் பாய் எனக்கு அறிமுகம் ஆனது 1994 இல். என் அத்தை எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் தமிழாசிரியர். அவரால் நடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் விட்ட ஒரு காலத்தில், எங்களுக்கு அறிமுகம் ஆன ஆட்டோ ஓட்டுனர் மும்தாஜ் பாய். அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தாலும், அவரது பெண் என் அத்தையின் மாணவி என்பதாலும் அவளது பெயரே, அவள் தந்தையின் பெயராய் போனது. மும்தாஜ் பாய்!

பார்பதற்க்கு சிறிது குள்ளமாய், உருண்டையாய் கிட்டத்தட்ட நடிகர் ஹனீபா வை நினைவு படுத்தும் உருவம். உற்சாகமான மனிதர். தினமும் காலை 8:30 மணிக்கு - "டீச்சர்!!" என்னும் அவர் குரலும், "வந்துட்டேன் பாய்" என்கிற என் அத்தை குரலும் இன்னும் எனக்கு மறக்க வில்லை. எங்கள் வீட்டுக்கு உள்ளே வந்து எல்லாரிடமும் நன்றாய் பேசும் பழக்கம் அவருக்கு. நான் "சுஜேந்தர்" (சுரேந்தர்  என்ற பெயரில் 'ரே' வராது), என் தம்பி பாபு, என் அப்பா சார், என் அம்மா சிஸ்டர், அத்தை டீச்சர் - இப்படிதான் எல்லாரையும் அழைப்பார்.
அப்போது ப்ரண்ட் (Front) என்ஜின் ஆட்டோ வைத்திருந்தார். டிரைவர் சீட்டுக்கு அடியில் எஞ்சின் இருக்கும்.

1998 இல் நான் எழாவது படிக்கும் போது - எனக்கு இடது கையில் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டது. அது வரை நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நான், ஆட்டோவில் செல்ல ஆரம்பித்தேன். இணைப்பாக என் தம்பியும். எங்கள் குடியிருப்பில் உள்ள ஆட்டோ டிரைவர்களில் பொறுப்பாய் இருப்பவர் மும்தாஜ் பாய் என்பதால் அவரை அழைத்து பேசப்பட்டது.

"வேகமா போகாத பாய், பசங்கள பாத்து கொண்டு போய் விடு" - என்னும் அப்பாவின் குரலுக்கு, "ஆ ங் , நான் பாத்துக்கறேன் சார்" என்று சொல்லி எங்களை பார்த்து சிரித்தபடி , ஆட்டோவை ஸ்டார்ட் செய்வார். எனக்கு கை அதிரக்கூடாது என்பதற்காக அவ்வளவு பொறுமையாய் ஓட்டுவார். கிட்டதட்ட அந்த ஒன்றரை வருட பழக்கத்தில், தெருவில் ஒரு ஆட்டோ சத்தம் கேட்டாலே, மும்தாஜ் பாயின் ஆட்டோவை கண்டுகொள்ளும் திறன் எங்களுக்கு வந்து விட்டிருந்தது.

நான் சைக்கிள் பழகியது எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். "பையன் கீழே விழுந்துடுவான்" என்று சொல்லியே அது வரை எனக்கு சைக்கிள் சொல்லிதரபடவில்லை. எனக்கு சைக்கிள் பழக்கியது மும்தாஜ் பாய். அவர் பிடித்து கொள்ள, நான் ஓட்டி பழகினேன். பிறகு அவரை சைக்கிள் கேரியரில் வைத்து கொண்டு, எங்கள் வீட்டுக்கு பின்னால் உள்ள சிறு தொழில் பூங்காவில் ரவுண்டு அடித்திருக்கிறேன்.


ஒரு நாள், எனக்கு மூட் சரி இல்லாத போது அவர் ஏதோ சொல்லபோய் நான் ஏதோ புரிந்து கொண்டு, "இனிமே பாய் ஆட்டோல நா போ மாட்டேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டேன். என்னை விட 40 வயது பெரியவராய் இருந்தாலும், என்னிடம் கெஞ்சி கொண்டிருந்தார். "நான் அப்டி எல்லாம் சொல்லல சிஸ்டர்.. சின்ன பையன் ஏதோ கோவப்பட்டான், விடுங்க நான் பேசறேன்" - அவர் கண்ணில் முதன் முதலில் கண்ணீர் பார்த்த நாள்.

நாங்கள் முதலில் சைக்கிள் வாங்கியபோது, நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி  அடைந்தோமோ அந்த அளவுக்கு வருத்தம் அடைந்தவர் அல்லது அடைந்தது போல்  நடித்தவர் மும்தாஜ் பாய்."போடா டேய், மாசம் 400 ரூபா போச்சு டா, சைக்கிள் வாங்கிட்டீங்க, நீங்க வேலைக்கு வந்ததும் மாசம் 500 ரூபா எனக்கு தரனும்" - என்று உரிமையோடு கேட்பார். அவர் ஒரு அ.தி.மு.க  காரர். அவர் காலை வாருவது என் அப்பாவின் பொழுது போக்கு.. "எப்படி சொல்றார் பார் " என்று என்னை பார்த்து கேட்பார். எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் - எங்கள் அப்பாவின் அறையில்  உள்ள கண்ணாடியில் முகம் பார்த்து அங்கே இருக்கும் கோகுல் சாண்டல் பவுடரை போடும் வழக்கம் வைத்திருந்தார்.
அவருக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்று ஆசை, அவர் கற்று கொண்டவை இரண்டு, "ப்ளடி பூல்" , "வாட் நான் சென்ஸ் யு ஆர் டாக்கிங்".. அவர் இது ரெண்டும் உபயோகித்தால் உற்சாகமாய் இருக்கிறார் என்று அர்த்தம். பிறகு ஒரு நாள் என் அப்பா, "இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமாய்யா?" என்று கேட்டு சொன்னபோது - எனக்கு தெரியல சார் என்று வருத்தப்பட்டார்.

நான் பள்ளி முடித்து கல்லூரி சென்ற போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை குறைத்து விட்டிருந்தார். நான் எப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தாலும், என் சட்டை பைக்குள் கை விட்டு, காசு குட்றா என்பார்.. "இவன் வேஸ்ட் சார், உங்கள மாதிரி, காசே தரதில்ல, நமக்கு பாபு தான் ரைட்" - என்று என் தம்பியிடம் செல்வார். வேலைக்கு வந்தவுடன் அவருக்கு ஏதாவது  தர வேண்டும் என்று நினைத்து கொள்வேன். 

என் சித்தப்பா இறந்த போது கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்தது மும்தாஜ் பாய். நான் சித்தப்பா முகத்தை பார்க்க முடியவில்லை, தஞ்சாவூரில் இருந்து வருவதற்குள் எடுத்து விட்டிருந்தார்கள். அப்பாவுக்கு தெரியாமல், மாலை 6:30 மணிக்கு மயானத்திற்கு அழைத்து சென்றவர் பாய். - நல்ல உடம்பு  டா, முழுசா எரிஞ்சு போச்சு என்றார். அவை எல்லாம் இன்று கண் முன்னே வந்து செல்கின்றது.

எனக்கு வேலை கிடைத்த தகவலை அவருக்கு சொன்னவுடன், எந்த ஊர் டா, என்ன சம்பளம், மாசம் எனக்கு மாமூல் தரணும், மறந்துடாத என்று சிரித்து கொண்டே சொன்னார். நான் வேலையில் சேர்ந்த போது, அவர் ஆட்டோ ஓட்டுவதை முழுவதுமாய் நிறுத்தியிருந்தார். அவரை வீட்டுப்பக்கம் பார்க்க முடியவில்லை, ஒரு நாள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒரு செட் டிரஸ் எடுத்து தரவேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். 

போக முடியவில்லை என்பது பொய். சோம்பேறித்தனம் என்பதே உண்மை. நாளை போகலாம், நாளை மறுநாள், அடுத்த வாரம் என்று மூன்று வருடங்கள் கடந்து விட்டன.

போன வாரம் ஒரு நாள் காலை அப்பா என்னை மொபைலில் அழைத்து - "மும்தாஜ் பாய் போயாச்சு" என்ற போது என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில், அதற்கு முந்தைய நாள் தான் பாயை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். சாவுக்கும் நான் போகவில்லை.ஒரு குற்ற உணர்ச்சி என்னை குத்தி கொண்டே இருக்கிறது. ஒருவர் இருக்கிற போது அவர் அருகாமை பெரிதாய் தெரிவதில்லை என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லி போயிருக்கிறார் பாய்.

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

இனிமேல் நான் செய்ய விரும்புவது ஒன்றே! - ஒருவரை சந்திக்க வேண்டும்  அல்லது  அன்பு செலுத்த வேண்டும் என்று நினைத்து விட்டால் அதனை உடனே செய்ய வேண்டும். காலமும், உயிரும் அன்புக்காக காத்திருப்பதில்லை.

We must give importance to time when it comes to love..

என்றும் அன்புடன்,
சுரேந்திரா







Tuesday, July 27, 2010

வாழ்வா ஜா(சா)வா?




வானத்தை தொட்டு கொண்டிருக்கும் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் மறைந்திருக்கும் அந்த மென் பொருள் நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆறாவது சதுரகத்தில்(Cubicle) அமர்ந்திருந்தான் சாகர். கல்லூரி கடந்த பின், இரண்டு வருடங்கள், ஜாவாவோடு கழித்து, அயல் நாட்டு கலாச்சாரங்கள் கற்று கொண்டு, சரி வர உணவு, தூக்கம் இல்லாமல் வேலை செய்யும் அவன் எல்லோரையும் போல் ஒரு மென் பொறியாளன். என்னதான் செய்தாலும், தனக்கான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று பெருமூச்சை எய்தி கொண்டு, எதிர்பார்த்த வெளியீடு(Output) வராது என்று தெரிந்த பிறகும், தன் ஜாவா இயக்க திட்ட செயலாக்கதோடு(Program) போராடி கொண்டிருந்தான்.


"சாகர், கம் டு மீ". குரல் கேட்டு திரும்பினான் சாகர். அவனது பதிலுக்கு காத்திராமல், வேகமாய் போய் கொண்டிருந்தார் கோபாலன் ராதாகிருஷ்ணன். அவனது பணித்திட்ட மேலாளர்(Project Manager).



"என்ன சொல்ல போகிறாரோ?", இருக்கையை விட்டு எழுந்து சென்றான் சாகர்.


"கோபால், மே ஐ..?", மடிக்கணினியில் இருந்து தலை தூக்கினார் கோபாலன்.


"எஸ் சாகர்,சிட், "அவருக்கு எதிரான அந்த சுழல் நாற்காலியில் அமர்வதற்கே அவனுக்கு பிடிக்காது. அமர்ந்து கொண்டான்.


"சாகர், ஹோப் யு நோ திஸ். அவர் அக்கௌன்ட் இஸ் நாட் டூயிங் குட். வி ஃபெய்ல்ட் டு டெலிவர் சம் ஆப் தி டெலிவரபில்ஸ் அட் டைம்". கோபாலன், சுத்த தமிழராய் இருந்தாலும், கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதில் வரும்.


"பய் திஸ் டைம், வி ரிக்வயர் அக்க்ரசிவ் ப்ளான்ஸ் டு பி இன் ப்ளேஸ் அண்ட் யு கைஸ் ஷுட் பி மோர் ப்ரோடக்டிவ் தென் பிஃபொர், பட் ஐ அம் நாட் சீயிங் எக்ஸ்பெக்டட் பர்பார்மன்ஸ் ப்ரம் யு". அமைதியாக இருந்தான் சாகர். " ஆப்டர் டூ பிளஸ் ஈர்ஸ் ஆப் எக்ஸ்பீரியன்ஸ், திஸ் இஸ் நாட் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யு. ஈவன் கய்ஸ் வித் லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஆர் டூயிங்க் பெட்டர் தேன் யு". சாகருக்கு எரிச்சலாய் வந்தது.அந்த எரிச்சலை ரசித்த கோபாலன், "சாகர், லெட் மி டெல் யு திஸ், வென் ஐ வாஸ் லைக் யு,இஃப் ஐ ஃபெய்ல்ட் டு கம்ப்ளீட் மை டாஸ்க்ஸ், ஐ வாஸ் ஃபீலிங்க் அஷெம்ட் டு லுக் அட் மை பாஸ்!. யு கய்ஸ் ஷுட் பி லைக் தட்!",


"நான் போகலாமா?" என்ற பார்வையோடு கோபாலனை பார்த்தான் சாகர். இரு கை விரல்களையும் கோர்த்து கொண்டு, அவன் கண்களயே உற்று பார்த்துக்கொண்டிருந்தார் கோபாலன். போதாக்குறைக்கு எய்ன்ஸ்டெய்ன் ரிலேடிவிடி தியரி வேறு சாகருக்கு நினைவுக்கு வந்தது, Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl........................... ".


"வெல், சாகர், ஐ அம் நாட் இம்ப்ர்ஸ்ட்..ஹோப் யு நோ PR (Performance Review) இஸ் ஆன் தி வே! ", மேலாளர்களுக்கு என்று ஒரு தனி சிரிப்பு இருக்கும், அப்படி சிரித்தார்.


இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் சாகர். அந்த கணிணி முன்னால் போய் உட்காரவே அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டு நினைப்பு வந்தது. அடுத்த சதுரகத்தில் இருக்கும் சல்மா தலையை சிலுப்பிக்கொண்டு கேட்டாள், "சாகர், யெனிதிங்க் ராங்க்?", "நதிங்க், சல்மா...., ஐ அம் ஓகே,", பொய் சொன்னான்.


அடுத்த இரண்டு வாரங்கள் சாகருக்கு நரகமாய் கழிந்தது.நிறைய கேள்விகள், நிறைய உதடு பிதுக்கல்கள்,நிறைய தன்னிலை விளக்கங்கள். அடுத்தது என்ன, என்று நினைத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் சாகருக்கு அந்த மின்னஞ்சல் வந்தது.


Dear Saagar Sundaramoorthy,


We regret to inform you that your employment with TetraLogica Systems shall be terminated on October 8th, 2008, for the following reasons:

1. Poor performance

2. Failure in executing recovery plans

3. Inability (or unwillingness) to follow directions

Severance payments shall be made in accordance with company policy. I recommend that you being to plan for your future insurance needs because the firm shall not maintain insurance coverage for you beyond the date of termination.

Please arrange to return any company property that is in your possession.


Although we regret the situation, this act is compulsory.


Respectfully,

XXXXXXXXXXX


தலை சுற்றிகொண்டு வந்தது. கால்கள் தடதடத்தன. அதற்குள் கழுத்தை சுற்றி இருந்த அடையாள அட்டை பிடுங்கப்பட்டிருந்தது.


சில, பல மாதங்கள் கழித்து.....................


ந்த கட்டிடத்தின் தலையில் "ரிவேரா" என்று நியான் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தொடை தெரிய பெண்களுமாய், கருப்பு உடை அணிந்த ஆண்களுமாய், திரவக்கோப்பை சிதறல்களுமாய் அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது."Let's rock the party!!!" டி.ஜே கூவிக்கொண்டிருந்தான். அரையிருட்டில் ஒளி, கதிர்களாய் படர விடப்பட்டிருந்தது. இரண்டு ஷாட் டகிலாவும், சில லார்ஜ் பகார்டியும் உள்ளே போன காரணத்தினால், கோபாலன் சற்று நிலை தடுமாறி இருந்தார். அவருடைய பளேசர் வியர்வையில் நனைந்திருந்தது. தட்டு தடுமாறி வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து தன் சிற்றூர்ந்தின்(Car) கதவினை திறந்து உள்ளே உட்கார்ந்தார். சாலையில் தவழ்ந்து இறங்கி சீரான வேகத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது. சாலையில் வரும் வாகனங்களின் வெளிச்சம் கோபாலனின் கண்களை கூசியது. தன் இடது கையை தூக்கி வண்டியின் கண்ணாடியை சரி செய்தார். அந்த கண்ணாடியில்........ பின் இருக்கையில் இருந்து எழுந்த அந்த உருவத்தின் பிம்பம் நிழலாடியது.


"சா...க... ர்...", கோபாலன் முகம் முழுவதுமாய் வியர்த்திருந்தது.


"சும்மா, உங்கள பத்திரமா வீட்ல விடலாம்னுதான்" . முதன்முறையாக கோபாலனிடம் தமிழில் பேசினான்.


"நோ...நோ.....!".கடைவாயில் விழுந்த அடியில் கோபாலன் மயங்கி இருந்தார்.


மீண்டும் அரையிருட்டு.வெள்ளை நிற மேல் உள்ளங்கியில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தார் கோபாலன். லேசான மயக்கம். இருக்கும் இடம் என்னவென்று தெரியவில்லை. அவர் உட்கார்ந்திருந்த அந்த நாற்காலி மின்கம்பிகளால் அங்கிருந்த கணிணியோடு இணைக்கப்பட்டிருந்தது. தான் எங்கிருக்கிறோம் என்று புரியவே கோபாலனுக்கு நேரம் தேவைப்பட்டது. அது ஏதோ ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போல இருந்தது. சாளரங்கள்(Window) எங்கேயும் காணப்படவில்லை.


"நா.. நான் எங்க இருக்கேன்??"


"கவலைப்படாதீங்க! நல்லாத்தான் இருக்கீங்க.... இந்த நிமிஷம் வரைக்கும்!", கையில் கத்தியுடன் நிற்கும் சாகரின் உருவம் இருட்டாய் தெரிந்தது.


"சாகர்.. யு பாஸ்டர்ட்..." . சிரித்தான் சாகர்.


"சத்தம் போட்டா இங்க வேலைக்கு ஆவாது கோபாலன்"


"சா... சாகர்.. டேக் ஆல் மை மனி....., லீவ் மி சாகர்... ப்லீஸ்!"


"அடடா.... உங்க பணத்துக்காக உங்கள கடத்தினேனு நெனைக்கறீங்களா?, யு ஆர் அப்சலூட்லி ராங்க் மிஸ்டெர் ராதாகிருஷ்ணன்!"


குழப்பக்குறிகள் கோபாலனின் முகத்தில் வட்டமிட்டன.


"வாட் இஸ் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் கோபாலன்?" - சாகர்.


"வ்வாட்??"


கோபாலனின் முகத்தை நோக்கி குனிந்தான் சாகர். அவன் கண்கள் சிவப்பாய் பளபளத்தன.


"ஐ செட், வாட் இஸ் யுவர் ஃபக்கிங்க் எக்ஸ்பீரியன்ஸ் இன் திஸ் ப்ளடி ஐ டி இண்டஸ்ட்ரி"?


"ஃபிஃப்... ஃபிஃப்டீன் ஈர்ஸ்..."


"ஹௌ மனி க்ய்ஸ் யு ஹவ் ஸேக்ட் (Sacked) இன் திஸ் ஃபிஃப்டீன் ஈர்ஸ்?"


"சாக்.. சாகர்... அண்டர்ஸ்டாண்ட்... தட் வாஸ் நாட் மை டெசிஷன்.. தட்.. தட்.. வாஸ் மேனேஜ்மெண்ட்ஸ் டெசிஷன், ஐ நெவெர் தாட் ஆஃப் சென்டிங்க் யு அவுட்..!"


"என்ன கேட்டேனோ அதுக்கு பதில்...,", கத்தியின் அழுத்ததில் கோபாலனின் கன்னத்தில் இருந்து ரத்தம் கோடாய் வழிந்தது.


"மே.. மே பி.... 25 " , கோபாலனின் குரல் படபடத்தது.


"ஓ.... மே பி... 25, குட் ஆன்ஸர் கோபாலன், அவங்க எல்லாம் அதுக்கு அப்புறம் என்ன ஆனாங்கனு தெரியுமா?" - சாகர்.


"ஐ... ஐ டோண்ட் நோ சாகர்...". அழுதார் கோபாலன். "யு கெட் ஃபக்கிங்க் தவுசண்ட்ஸ் ஆஃப் ஜாப்ஸ் , ஈவன் இஃப் ஐ த்ரோ யு அவுட் மேன்.. , ஒய் தி ஹெல் யு ப்ரிங்க் மி ஹியர்?" - அவர் குரல் உடைந்தது.


"எனக்கு கிடைக்கலயே!" - சாகர் குரல் எழுந்ததில் அவர் குரல் அடங்கியது.


"சா.. சாகர், ஐ.. ஐ.. வில் கெட் யு அ ஜாப்...., பிலீவ் மி.. ப்லீஸ்.. லீவ் மி சாகர்... ப்லீஸ்!"


"ஓ!.... தென் வாட் வில் யு பே (Pay) ஃபார் தி திங்க்ஸ் ஐ ஹேவ் லாஸ்ட்?, மை ஹவுஸ் வாஸ் செட் டு ஆக்க்ஷன் (Auction) அஸ் ஐ வாஸ் நாட் ஏபில் டு பே மை டெட்ஸ்(Debt), மை ஃபாதர் பாஸ்ட் அவே(passed away) ஆஃப் திஸ் டிப்ரஷன், வில் யுவர் ஜாப் கெட் ஹிம் பேக்?"


பதிலேதும் தெரியாமல் அமர்ந்திருந்தார் கோபாலன்.


"சில் அவுட் கோபாலன்!! லெட்ஸ் ப்ளே அ கேம் நவ்...." - சாகர்.


அங்கிருந்த மின்சார கம்பிகளை தாண்டி நடந்து அந்த கணிணியை உயிர்ப்பித்தான் சாகர். திரை உயிர் கொண்டு எழுத்துக்கள் தோன்றின.


"கோபாலன், டெல் மி யுவர் ஃபேவரிட் ப்ரொக்ராமிங்க் லாங்குவேஜ்?" - சாகர்.


"எ.. எதுக்கு?"


"ஓகே, ஐ வில் கிவ் யு சாய்சஸ், 1.ஜாவா ஆர் 2.யுனிக்ஸ் ஸ்க்ரிப்ட், டெல் மி"


"ஜா.. ஜாவா...", தடுமாறி சொன்னார் கோபாலன்.


"ஓகே, இந்த 'ஜாவா'தான் இப்போ உன் உயிர் குடிக்க போற எமன்!, எஸ்...... திஸ் லாங்குவேஜ் இஸ் கோயிங்க் டு கில் யு", அடித்தளம் அதிரும்படி சிரித்தான் சாகர்.


"கோபாலன், ஐ பில்ட் திஸ் இண்டர்ஃபேஸ், நான் எழுதிருக்குற இந்த 'ஜாவா' கோட(Code) ரன் பண்ண உடனே, நேரம் என்டெர் பண்ண சொல்லி கேக்கும். நான் குடுக்க போற அந்த நேரம்தான், நீ இந்த உலகத்துல வாழப்போற கடைசி நொடிகள்!, ஏன்னா, அந்த நேரம் முடிஞ்ச அப்பறம், இந்த 'ஜாவா' ப்ரோக்ராம், இதோ..... இங்க இருக்கற 'எலக்ட்ரிக் சர்க்யூட்ட' 'ஆன்' பண்ணும்.

ஜஸ்ட் இமேஜின்.. 4000 வாட் பவர் உன் மூளைக்குள்ள இருக்கற ஒவ்வொரு நியூரானுக்கும் பாயப்போறத......" - சாகரின் கண்களில் குரூரம் மின்னியது.


"சாகர்..யு.. யு ஆர் நாட் டூயிங்க் திஸ் டு மி... சாகர்.. ப்லீஸ்... முட்டாள்தனமா எதுவும் பண்ணாத... ப்லீஸ்...."


C:/> javac KillGopalan.java


C:/> java KillGopalan

Enter the time in seconds: 100

Count Thread Starts.....

Gopalan is going to die in : 99

Gopalan is going to die in : 98

............................

............................


அந்த எலக்ட்ரிக் சர்க்யூட், தன்னிடம் உள்ள சிகப்பு விளக்கை எரித்து, எரித்து காட்டிக்கொண்டிருந்தது.

கோபாலனின் நாக்கு வரண்டு போனது. வியர்வையில் உடல் முழுவதுமாய் நனைந்திருந்தது. உடல் திமிறிக்கொண்டிருந்தது. தன்னை நோக்கி வரும் மரணத்தை கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார்.


"சா..சா..கர்... எ.. என்ன விட்டு.... "


Gopalan is going to die in : 04

Gopalan is going to die in : 03

Gopalan is going to die in : 02

Gopalan is going to die in : 01

.....................................................................................


[ERROR] : Failed to establish connection to the hardware device.


"வ்வாட்ட் தி ஃப............??????" , வெறியோடும், குழப்பதோடும் தன் 'ஜாவா' இயக்கத்திட்ட செயலாக்கத்தை 'பழுது' (Debug) பார்ப்பதில் ஆழ்ந்தான் சாகர்.


கோபாலன் சற்று நேரம் ஆசுவாச பெருமூச்சு விட்டார் !

Sunday, May 23, 2010

ராவணா ! (எந்த அளவு உண்மைனு தெரியல...)


நேற்று கொஞ்ச நாள் கழிச்சு, என்னோட ஒரு பழைய மெயில் டி ஒண்ணு இருக்கே, லாகின் பண்ணி மெயில் செக் பண்ணலாம்னு பண்ணேன்.

அதற்கு இன்னும் பார்வர்ட் மெயில் அனுப்பும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்த போது நன்றாக இருந்தது. அது போகட்டும்! இப்போ மேட்டர் அதுவல்ல....

என் இன்பாக்ஸில் , "Raavan - Unfortunaltely the climax revealed" என்ற சப்ஜெக்டோடு ஒரு மெயில் இருந்தது! ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன்.............................
...


அதன் கிளைமாக்ஸ் என்னவென்றால்................................

"ராவணன்" என்றொரு ஆளே கிடையாது என்பது தான்....

அதாவது பீரா / வீரா (அபிஷேக் / விக்ரம் ) என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும்.

ராகினி (ஐஸ்வர்யா ராய்), ஒரு நடன/இசை பயிற்சியாளர். சிறு வயது முதல் நிறைய கற்பனை கதைகளால் வளர்க்கப்பட்டவள் அவள்.அவளுடைய கணவன் தேவ் (விக்ரம் - ஹிந்தி , ப்ரித்வி - தமிழ் ). தேவ் ஒரு போலீஸ் அதிகாரி. அவன் பீரா/வீரா எனப்படுகிற 'ராபின் ஹூட்' போன்ற யாருமே பார்த்திராத ஒருவனை தேடி காட்டுக்குள் செல்கிறான்.

தேவ் , வீராவை பற்றி சொல்லும் கதைகளை கேட்கும் ராகினி, வீராவின் பால் ஈர்க்கப்படுகிறாள். தேவின் கதைகளுக்குள் தன்னை சேர்த்து கொள்கிறாள்.

ஒரு நாள் , வீராவின் தங்கை திருமணம் டக்கபோகிறது, அங்கே போனால் வீராவை பிடிக்கலாம் என்ற செய்தி வர, தேவ் வீராவை தேடி போகிறான். அங்கே நடக்கும் குழப்பத்தில், அந்த திருமண பெண் 'தேவால்' தவறுதலாக கொல்லபடுகிறாள்.

இங்கிருந்துதான் 'ராமாயணம்' தொடங்குகிறது!

வீரா ராகினியை கடத்த, தேவ் இந்த இருவரையும் தேடி பயணப்பட....
ஒரு கட்டத்தில், வீராவும், ராகினியும் காதல் வசப்பட .........
முடிவில், உணர்ச்சிகரமான கிளைமாக்சில் தேவ் வீராவை கொல்கிறான்....

நிற்க!!

இங்கேதான் மணிரத்னத்தின் விளையாட்டு ஆரம்பிக்கிறது...

இங்கே நடந்த முக்கால் வாசி சம்பவங்கள் "ராகினியின்" கற்பனையே!

அவளுக்கு இருப்பது 'Multiple Personality disorder'. நம் தலைவர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை, A possession state'.

தன் திருமண வாழ்கையில் பெரிய பிடிப்பேதும் இல்லாத ராகினி தேவ் சொல்லும் கதைகள் மூலம், தன் மூளைக்குள் நடத்தும் கதை களம் தான் 'ராவணன்'.

வீரா தான் என்னை கடத்தி செல்கிறான் என்று, தானாகவே காட்டுக்குள் செல்லும் ராகினியை தேடி போகும் தேவின் பயணம் தான் 'ராவணன்' ஆக படமாக்கபட்டிருக்கிறது.

முடிவில், பீரா/வீரா என்று ஒரு கதாபாத்திரம் இருக்கிறது (பிரபு - தமிழ் , ரவிகிஷன் - ஹிந்தி). அனால், அது ராகினி நினைக்கும் 'ராவணன்' போன்றதொரு'ஹீரோ' இல்லை. ஒரு சாதாரண கிரிமினல்!!

ஹ்ம்ம்ம்..........

கதை நன்றாகதான் இருக்கிறது, பார்போம் மணி சார் எப்படி இதை விஷுவலாக்கி இருக்கிறார் என்று!!!

நானும் பத்து தலை ராவணனுக்காக காத்து கொண்டிருக்கிறேன்!!!!

டிஸ்கி : இந்த கதை எனக்கு ஒரு மெயிலில் வந்த கதை. தலைப்பு சொல்ற மாதிரி
எந்த அளவு உண்மைனு தெரியல...



Thursday, October 29, 2009

அவனும்.. அவளும் !

தழுவு! தழுவாமல் இரு!
என் மோகத்தை அலைகழிக்காதே
மெத்தை தேவதையே!

காதலின் மிச்சமே காமம்
என்றாய் காலையில்!
இரவானதும் உன்
வார்த்தைகள் மாறுவது ஏனோ?

மூச்சிரைப்பின் முடிவில்
என் மார்பில் முழுமையாய் நீ!
நிலவு வெட்கப்பட்டு சிவந்தது!

கேட்டதும் கொடுத்துவிட்டால்
கட்டிலுக்கு அழகில்லையாம்!
தலையணை என் காதில்
தனியே சொல்லியது!

மோகத்தின் வேகத்தில்
நீயும் கவனிக்கவில்லை !
நானும் கவனிக்கவில்லை!
கண்ணாடியில் நம் பிம்பங்கள்
நம்மை பார்த்து
நமுட்டு சிரிப்பு சிரித்ததை...

எட்டி கிடக்கும் உடைகளை
எடுக்க எத்தனித்தேன்.
என் விரல்கள் உன்
கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்தன!

களவாடிய பிறகே புரிந்தது!
திருடன் நான் இல்லை.
நீதான் திருடி என்று!

முழுதாய் என்னருகே அமர்ந்து
'என்னில் என்ன பிடிக்கும்?' என்றால்
நான் எதை சொல்ல ?
எதை விட ?