Thursday, October 29, 2009

அவனும்.. அவளும் !

தழுவு! தழுவாமல் இரு!
என் மோகத்தை அலைகழிக்காதே
மெத்தை தேவதையே!

காதலின் மிச்சமே காமம்
என்றாய் காலையில்!
இரவானதும் உன்
வார்த்தைகள் மாறுவது ஏனோ?

மூச்சிரைப்பின் முடிவில்
என் மார்பில் முழுமையாய் நீ!
நிலவு வெட்கப்பட்டு சிவந்தது!

கேட்டதும் கொடுத்துவிட்டால்
கட்டிலுக்கு அழகில்லையாம்!
தலையணை என் காதில்
தனியே சொல்லியது!

மோகத்தின் வேகத்தில்
நீயும் கவனிக்கவில்லை !
நானும் கவனிக்கவில்லை!
கண்ணாடியில் நம் பிம்பங்கள்
நம்மை பார்த்து
நமுட்டு சிரிப்பு சிரித்ததை...

எட்டி கிடக்கும் உடைகளை
எடுக்க எத்தனித்தேன்.
என் விரல்கள் உன்
கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்தன!

களவாடிய பிறகே புரிந்தது!
திருடன் நான் இல்லை.
நீதான் திருடி என்று!

முழுதாய் என்னருகே அமர்ந்து
'என்னில் என்ன பிடிக்கும்?' என்றால்
நான் எதை சொல்ல ?
எதை விட ?



Wednesday, July 8, 2009

என் காதலே(?) என்னை என்ன செய்ய போகிறாய் ?

ஒரு மாதம் மற்றும் சில நாட்கள் கழித்து மீண்டும், முதல் பக்கம்! திரைப்படங்களில் பெரும்பான்மை காதலை சார்ந்தே எடுக்க காரணம்?? உலகத்தில் உள்ள உணர்ச்சிகளில், எவராலும் மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியாத , ஆனாலும் மிகவும் ஓர் அழகான உணர்ச்சி! காதலில் வென்றவருக்கும் சரி, தோற்றவருக்கும் சரி! சரிசமமாய் உன்னதமான அனுபவங்களை தருவது காதல்! அந்த வார்த்தையை உச்சரித்தாலே ஒரு அர்த்த புன்னகை வரும். வலிகளிலும் இன்பம் தரக்கூடிய ஒரே அற்புதம் "காதல்"! பூவே உனக்காக திரைப்படத்தின் ஒரு பாடல் வரி ,

"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது ,சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் "

எனக்கு பிடித்த பாடல் வரிகளில், இதுவும் ஒன்று. இன்னுமொரு மிக பிடித்த வரி ,


மனதில் இத்தனை ரணமா ?, அட வலியில் இத்தனை சுகமா?? அடடா அடடா அடடா அடடா ...........

இன்று ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்டால், "காதல் தோல்வி " என்பதில் உள்ள நிலைப்பாடு எனக்கு தெரியாததுதான்! காதல் தோல்வி என்றால் என்ன ?? இருவர் மனப்பூர்வமாய் காதலித்து, பிறகு சில, பல காரணங்களால் பிரிவதா, இல்லை, ஒரு தலை ராகம் பாடி விட்டு, 'எனக்கும் காதல் தோல்வி ' என்று சொல்வதா??? சத்தியமாய் எனக்கு தெரியவில்லை! எனக்கும் இந்த வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் பீலிங் வந்திருக்கிறது ..... ஆனால் அது காதல் தான் என்று அடித்து சொல்லும் நிலைமையில் நான் அன்று இல்லை! அந்தளவு விவரமாகவும் நான் அன்று இல்லை ! சில நாட்களுக்கு முன் "அவளுக்கு கல்யாணமாம் !! என்ற செய்தி வந்தது . எனக்கு பத்திரிக்கை எல்லாம் வரவில்லை (வராது!). ஆனால் அன்று முதல் ஏதோ ஒரு சிறு நெருடல், ஏனென்று தெரியவில்லை .. யோசித்து யோசித்து , அன்று எனக்கு காதல் தான் வந்ததோ என்று நினைக்கையில், அவளுக்கு திருமணம் என்ற செய்தி முன்னே வந்து நிற்கிறது! அவளை பார்க்க வேண்டும் போலிருந்தது, இளமையை இணைக்கும் தளமான "ஓர்குட்டில்" தேடினேன்! அவளது முகப்புரை கிடைத்தது.... அதே புன்னைகையோடு புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தாள் .. கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டே இருந்தேன்.. நான் நாளை புதிய வேளையில் சேர போகும் நாளில், அவளுக்கு திருமணமாம்!!


நிஜமாய் என்னிலை தெரியாமல் தான், இதை எழுதி கொண்டிருக்கிறேன். இதை எழுதும் போதும் கூட இதுதான் காதல் என்று வரையுருத்து கூற முடியவில்லை!


அவளுக்கு கல்யாணம் ஆகிறதே என்று வருத்தபடவேல்லாம் இல்லை.. ஆனால் ....................................

எதையோ ஒன்றை இழந்து விட்டது போல் ஒரு நெருடல்..


இனம் புரியாத உணர்வுகளை, காரணமில்லாமல் தருவதா காதல்???


என் காதலே (?) என்னை என்ன செய்ய போகிறாய்??

Thursday, May 14, 2009

கல்வி கண் போன்றது!

நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல், எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் , நாமக்கல் மாணவன் முதலிடம், சென்னை மாணவி இரண்டாமிடம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல், கேமராவை காட்டி, பள்ளி டீச்சர்களும், பெற்றோர்களும் அந்த பிள்ளைகளுக்கு இனிப்பு ஊட்டுதலும், "நான் இந்த மார்க் வாங்க எங்க அப்பா, அம்மாவும், ஸ்கூல் டீச்சர்ஸ் தான் காரணம்" என்ற சம்பிரதாய டயலாக்குகளும் அரங்கேறிகொண்டிருந்தன. வழக்கம் போல், மாணவர்கள் தேர்வு முடிவு போர்டினை பார்க்கும் க்ளிப்பிங் இடம் பெற்றிருந்தது. வழக்கம் போல், பள்ளி முதல்வர்கள் இதற்கு முன்னர் அந்த மாணவனை பார்த்தே இல்லாவிட்டாலும் , "திரு. ........., படிப்பில் எப்போதுமே சிறந்து விளங்குவார். மிகவும் ஒழுக்கமான மாணவன், ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நன்றாக கவனித்து படிக்க கூடியவர் " , என்று தான் பள்ளிக்கு ஒரு விளம்பரம் ஏற்படுத்திகொடுத்த அந்த மாணவர்களை பாராட்டிக்கொண்டிருந்தர்கள். வழக்கம் போல், "நான் மெடிசின் படிக்கணும் , இன்ஜினியரிங் படிக்கணும், : என்று அந்த மாணவ கண்மணிகள் பேட்டி கொடுத்தன. வழக்கம் போல், "அவனுக்கு எப்பவுமே படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்" , என்று பெற்றோர் , தன் பிள்ளை பெருமை பேசிகொண்டிருந்தனர்.

என்ன தான், இவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தாலும், இவர்களில் எத்தனை பேர் ஒரு மிகச்சிறந்த பொறியாளனாகவோ, மருத்துவராகவோ வருகிறார்கள்? எனக்கு தெரியவில்லை!

மேலும், ஒரு அரசு பள்ளி மாணவனோ, ஒரு "இரண்டாம்-நிலை" பள்ளி மாணவனோ இந்த "முதல்வர்கள்" என்ற லிஸ்டில் பெரும்பாலும் வருவதே இல்லை. காரணம் ?

* ஆசிரியரின் அலட்சியபோக்கு
* சரியான வழிகாட்டுதல் இன்மை.
* கல்வி மீதான மாணவன் மற்றும் ஆசிரியரின் அணுகுமுறை
* மேற்கல்வி தொடர்பான மாணவனின் திட்டங்கள் தொலைநோக்கோடு இல்லாமல் இருப்பது
* இதற்கு பிறகு, பணமின்மை !!
* "படிக்காதவர்கள் பெரிய ஆள் ஆகலாம்", என்று சினிமா உருவாக்கி விட்ட மாயை

இதை மாற்ற என்னவெல்லாம் செய்யலாம், என்றால் மறுபடி "வியாபாரம்" என்ற சொல்லை உள்ளே கொண்டு வர வேண்டி இருக்கிறது. ஏனென்றால், தனியார் பள்ளிகள் நிச்சயமாக பணம் என்ற ஒன்றை அடித்தளமாக கொண்டுதான் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. (சிலர் , விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுக்கு என் சல்யூட்! ) எந்த பள்ளி, ஆசிரியனுக்கு நிறைய பணம் கொடுகிறதோ அங்கே ஆசிரியரின் தரம் நன்றாக இருக்கிறது!

ஆனால், அதிக பண வசதி இல்லாத தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன? வரவு இல்லாததால் ஆசிரியரும் கவனம் செலுத்துவதில்லை,சரியான உந்துதல் இல்லாததால் மாணவனும் படிப்பதில்லை!

அரசு பள்ளிகள், இதை விட கேவலம்! ஓர் அரசு பள்ளி ஆசிரியர், இப்போதெல்லாம் ஒரு மென்பொருள் பொறியாளனை விட அதிக சம்பளம் வாங்குகிறார். இதில் சைடு " ட்யூஷன்" வேறு! ஆனாலும் பள்ளியில் முன்னேற்றம் இல்லை, காரணம், அரசு வேலையின் அதீத சுதந்திரம்! "இன்ஸ்பெக்ஷன் வந்தாலும் சரி, நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற மனபோக்கு. பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் இப்போது, ஆசிரிய பணியை "சைடு" ஆக வைத்து கொண்டு "மெயின்" ஆக வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் எல்லாம் உயர்தர தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றன.

எல்லாம் சரி! வசதி இல்லாதவர்கள் பிள்ளைகள், உயர்தர தனியார் பள்ளி மாணவன் பெரும் வாய்ப்புகளை பெற முடியாதா? முடியும்! இதற்கு சில பேருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

முதலில், அரசு பள்ளிகளின் கல்வி முறை மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஏட்டு கல்வியை தாண்டி, "அப்ளைட் சயின்சஸ்", எனப்படும் செயல் முறைதொடர்பான கல்வி முறை வர வேண்டும். அப்பொழுது , தான் கற்கும் கல்வியை நிதர்சன வாழ்க்கையில பயன்படுத்தும் முறையை மாணவன் அறிவான், கல்வி மீதான ஆர்வம் நிச்சயம் பிறக்கும். இதற்கு ஆசிரியரின் அறிவு நிறைய இருக்கவேண்டும். கற்கும் கல்வியை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்று விளக்கும்அளவுக்கு "சரக்கு" இருக்க வேண்டும்.

அடுத்து, இருக்கக்கூடிய துறைகளில் எல்லாம், வேலை பார்ப்பவரை அழைத்துவந்து , அதாவது, ஒரு மென்பொருள் பொறியாளரயோ, ஒரு கட்டட கலை நிபுணரையோ, ஒரு மருத்துவரையோ , ஒரு கலைத்துறையை சேர்ந்த நிபுணரையோ அழைத்து வந்து அடிக்கடி ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், தான் கற்கும் கல்வி எப்படி பயன் படுகிறது என்றும், தான் கற்பதால் அவன் எப்படி இருக்கலாம் என்று அவனுக்கான, எதிர்காலதிட்டங்களை வகுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

குறிப்பு : நிபுணர்களை அழைத்து வர காசு செலவு பண்ண வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பெரும்பாலோர் இதை சேவை என்று நிச்சயம் செய்வர்.

அடுத்து, பணம் இல்லாமல் படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவனை கண்டறிந்து, வங்கி கடன் முறைகளை பற்றி தெளிவு படுத்துவது ஆசிரியரின் கடமையாகும்.

இதெல்லாம் செய்யலாம், சிறிய தனியார் பள்ளிகள் என்ன செய்யும்? அவர்கள் "வியாபாரம்" என்ற வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் தான், மாணவர் முன்னேற்றம் காண முடியும். மாணவர்களிடம் "டொனேஷன்" என்று வாங்குவதை விடுத்து, ஒரு மிக பெரிய தொழில் அதிபரையோ, அரசியல் புள்ளியயோ பிடித்து, அவர்களிடம் பணம் கேட்டு தான் செய்யநினதவற்றைஎல்லாம் நிச்சயம் செய்யலாம். இவை எல்லா வற்றிலும் " நடைமுறை சிக்கல்கள் " எக்கச்சக்கம் உள்ளன. ஆனாலும், செய்யணும் என்று நினைத்தால் நிச்சயம் செய்யலாம்.

ஆகவே, முதலில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது, ஆசிரியர்களிடம். செய்வீர்களா ஆசிரிய பெரியவர்களே ????
"

மிஸ்டர். பொதுஜனம்



இன்று மாலை , என் தங்கை வீட்டுக்கு போய் விட்டு, வீடு திரும்ப , அசோக் பில்லரில் நின்று கொண்டிருந்தேன்! சென்னை பேருந்துகள், என் நேரத்துக்கு எப்போதும் வந்ததில்லை. ஒன்று நான் தாமதம், இல்லாவிட்டால் பேருந்து தாமதமாக வரும். இன்றும் அதே போல், பேருந்து ஒன்றும் இல்லை, அதனால் நின்று கொண்டிருந்தேன். அப்போது , ஒரு ஜோடி, பைக்கில் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னை தடுத்த காரை, லாவகமாக "சைடு" எடுத்த அந்த பைக் ஓட்டி, எதிரே வந்த ஆட்டோவை பார்க்கவில்லை. ஆனால், ஆட்டோமேலல்லாம் அவன் இடிக்க வில்லை, சாமார்த்தியமாக வண்டியை திருப்பிவிட்டான்!
ஆட்டோகாரன் சும்மா இருக்கவில்லை! "ஏண்டா, தே......யா பையா, நீ சாவ என் வண்டிதான் கெடச்சுதா?" . பைக் ஓட்டிக்கு இது பயங்கரமாய் சுட்டிருக்கவேண்டும் ! அப்படியே வண்டியை திருப்பி, ஆட்டோவிடம் வந்து, அந்த ஆட்டோகாரனை, கழுத்தை பிடித்து வெளியே இழுத்து, கீழே தள்ளி முகத்திலேயே மிதிக்க ஆரம்பித்தான். ஆட்டோகாரனும் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரத்தில் அங்கே கூட்டம் கூடி, ஆளாளுக்கு என்னாச்சு, என்னாச்சு என்று பேச தொடங்கினார்கள். பைக் ஓட்டி கூட வந்த பெண்ணும், கொஞ்ச நேரம் அவனை தடுத்து பார்த்தாள். பிறகு "இது வேலைக்கு ஆவாது" என்று அவளும் தூர போய் நின்று கொண்டாள். யாரோ ஒருவர் வந்து, விழுந்திருந்த பைக்கை நிமிர்த்திவைத்தார்.

என்னிடம் ஒருவர், "அங்க என்னாச்சு, 49 A பஸ் வருமா?", எனக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பொதுவாக , "தெரியல சார்" என்று சொல்லி வைத்தேன்.

"என்ன மனுஷா இவாளெல்லாம், இப்படி அடிச்சுக்கறா?", ஒரு கைத்தடி என்னிடம் வருத்தப்பட்டது.

"பின்னாடி பிகர் இருந்தா இப்படி தான் சீன் போடுவானுங்க," என்று இரண்டு
பேர், அங்கே இருந்தவள் தங்கையா, காதலியா என்று தெரியாமல் கூட பேசிகொண்டார்கள்!

நான் என்ன பண்ணிகொண்டிருந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்?

என்னுள் இருந்த "வேடிக்கை பார்க்கும்" சராசரி இந்தியனை நினைத்து கொண்டே
11 H
ஏறி வீடு வந்து சேர்ந்தேன்!