Thursday, May 14, 2009

கல்வி கண் போன்றது!

நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல், எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் , நாமக்கல் மாணவன் முதலிடம், சென்னை மாணவி இரண்டாமிடம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல், கேமராவை காட்டி, பள்ளி டீச்சர்களும், பெற்றோர்களும் அந்த பிள்ளைகளுக்கு இனிப்பு ஊட்டுதலும், "நான் இந்த மார்க் வாங்க எங்க அப்பா, அம்மாவும், ஸ்கூல் டீச்சர்ஸ் தான் காரணம்" என்ற சம்பிரதாய டயலாக்குகளும் அரங்கேறிகொண்டிருந்தன. வழக்கம் போல், மாணவர்கள் தேர்வு முடிவு போர்டினை பார்க்கும் க்ளிப்பிங் இடம் பெற்றிருந்தது. வழக்கம் போல், பள்ளி முதல்வர்கள் இதற்கு முன்னர் அந்த மாணவனை பார்த்தே இல்லாவிட்டாலும் , "திரு. ........., படிப்பில் எப்போதுமே சிறந்து விளங்குவார். மிகவும் ஒழுக்கமான மாணவன், ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை நன்றாக கவனித்து படிக்க கூடியவர் " , என்று தான் பள்ளிக்கு ஒரு விளம்பரம் ஏற்படுத்திகொடுத்த அந்த மாணவர்களை பாராட்டிக்கொண்டிருந்தர்கள். வழக்கம் போல், "நான் மெடிசின் படிக்கணும் , இன்ஜினியரிங் படிக்கணும், : என்று அந்த மாணவ கண்மணிகள் பேட்டி கொடுத்தன. வழக்கம் போல், "அவனுக்கு எப்பவுமே படிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்" , என்று பெற்றோர் , தன் பிள்ளை பெருமை பேசிகொண்டிருந்தனர்.

என்ன தான், இவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தாலும், இவர்களில் எத்தனை பேர் ஒரு மிகச்சிறந்த பொறியாளனாகவோ, மருத்துவராகவோ வருகிறார்கள்? எனக்கு தெரியவில்லை!

மேலும், ஒரு அரசு பள்ளி மாணவனோ, ஒரு "இரண்டாம்-நிலை" பள்ளி மாணவனோ இந்த "முதல்வர்கள்" என்ற லிஸ்டில் பெரும்பாலும் வருவதே இல்லை. காரணம் ?

* ஆசிரியரின் அலட்சியபோக்கு
* சரியான வழிகாட்டுதல் இன்மை.
* கல்வி மீதான மாணவன் மற்றும் ஆசிரியரின் அணுகுமுறை
* மேற்கல்வி தொடர்பான மாணவனின் திட்டங்கள் தொலைநோக்கோடு இல்லாமல் இருப்பது
* இதற்கு பிறகு, பணமின்மை !!
* "படிக்காதவர்கள் பெரிய ஆள் ஆகலாம்", என்று சினிமா உருவாக்கி விட்ட மாயை

இதை மாற்ற என்னவெல்லாம் செய்யலாம், என்றால் மறுபடி "வியாபாரம்" என்ற சொல்லை உள்ளே கொண்டு வர வேண்டி இருக்கிறது. ஏனென்றால், தனியார் பள்ளிகள் நிச்சயமாக பணம் என்ற ஒன்றை அடித்தளமாக கொண்டுதான் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. (சிலர் , விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுக்கு என் சல்யூட்! ) எந்த பள்ளி, ஆசிரியனுக்கு நிறைய பணம் கொடுகிறதோ அங்கே ஆசிரியரின் தரம் நன்றாக இருக்கிறது!

ஆனால், அதிக பண வசதி இல்லாத தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன? வரவு இல்லாததால் ஆசிரியரும் கவனம் செலுத்துவதில்லை,சரியான உந்துதல் இல்லாததால் மாணவனும் படிப்பதில்லை!

அரசு பள்ளிகள், இதை விட கேவலம்! ஓர் அரசு பள்ளி ஆசிரியர், இப்போதெல்லாம் ஒரு மென்பொருள் பொறியாளனை விட அதிக சம்பளம் வாங்குகிறார். இதில் சைடு " ட்யூஷன்" வேறு! ஆனாலும் பள்ளியில் முன்னேற்றம் இல்லை, காரணம், அரசு வேலையின் அதீத சுதந்திரம்! "இன்ஸ்பெக்ஷன் வந்தாலும் சரி, நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற மனபோக்கு. பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் இப்போது, ஆசிரிய பணியை "சைடு" ஆக வைத்து கொண்டு "மெயின்" ஆக வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் எல்லாம் உயர்தர தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றன.

எல்லாம் சரி! வசதி இல்லாதவர்கள் பிள்ளைகள், உயர்தர தனியார் பள்ளி மாணவன் பெரும் வாய்ப்புகளை பெற முடியாதா? முடியும்! இதற்கு சில பேருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

முதலில், அரசு பள்ளிகளின் கல்வி முறை மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஏட்டு கல்வியை தாண்டி, "அப்ளைட் சயின்சஸ்", எனப்படும் செயல் முறைதொடர்பான கல்வி முறை வர வேண்டும். அப்பொழுது , தான் கற்கும் கல்வியை நிதர்சன வாழ்க்கையில பயன்படுத்தும் முறையை மாணவன் அறிவான், கல்வி மீதான ஆர்வம் நிச்சயம் பிறக்கும். இதற்கு ஆசிரியரின் அறிவு நிறைய இருக்கவேண்டும். கற்கும் கல்வியை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்று விளக்கும்அளவுக்கு "சரக்கு" இருக்க வேண்டும்.

அடுத்து, இருக்கக்கூடிய துறைகளில் எல்லாம், வேலை பார்ப்பவரை அழைத்துவந்து , அதாவது, ஒரு மென்பொருள் பொறியாளரயோ, ஒரு கட்டட கலை நிபுணரையோ, ஒரு மருத்துவரையோ , ஒரு கலைத்துறையை சேர்ந்த நிபுணரையோ அழைத்து வந்து அடிக்கடி ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், தான் கற்கும் கல்வி எப்படி பயன் படுகிறது என்றும், தான் கற்பதால் அவன் எப்படி இருக்கலாம் என்று அவனுக்கான, எதிர்காலதிட்டங்களை வகுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

குறிப்பு : நிபுணர்களை அழைத்து வர காசு செலவு பண்ண வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பெரும்பாலோர் இதை சேவை என்று நிச்சயம் செய்வர்.

அடுத்து, பணம் இல்லாமல் படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவனை கண்டறிந்து, வங்கி கடன் முறைகளை பற்றி தெளிவு படுத்துவது ஆசிரியரின் கடமையாகும்.

இதெல்லாம் செய்யலாம், சிறிய தனியார் பள்ளிகள் என்ன செய்யும்? அவர்கள் "வியாபாரம்" என்ற வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் தான், மாணவர் முன்னேற்றம் காண முடியும். மாணவர்களிடம் "டொனேஷன்" என்று வாங்குவதை விடுத்து, ஒரு மிக பெரிய தொழில் அதிபரையோ, அரசியல் புள்ளியயோ பிடித்து, அவர்களிடம் பணம் கேட்டு தான் செய்யநினதவற்றைஎல்லாம் நிச்சயம் செய்யலாம். இவை எல்லா வற்றிலும் " நடைமுறை சிக்கல்கள் " எக்கச்சக்கம் உள்ளன. ஆனாலும், செய்யணும் என்று நினைத்தால் நிச்சயம் செய்யலாம்.

ஆகவே, முதலில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது, ஆசிரியர்களிடம். செய்வீர்களா ஆசிரிய பெரியவர்களே ????
"

மிஸ்டர். பொதுஜனம்



இன்று மாலை , என் தங்கை வீட்டுக்கு போய் விட்டு, வீடு திரும்ப , அசோக் பில்லரில் நின்று கொண்டிருந்தேன்! சென்னை பேருந்துகள், என் நேரத்துக்கு எப்போதும் வந்ததில்லை. ஒன்று நான் தாமதம், இல்லாவிட்டால் பேருந்து தாமதமாக வரும். இன்றும் அதே போல், பேருந்து ஒன்றும் இல்லை, அதனால் நின்று கொண்டிருந்தேன். அப்போது , ஒரு ஜோடி, பைக்கில் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னை தடுத்த காரை, லாவகமாக "சைடு" எடுத்த அந்த பைக் ஓட்டி, எதிரே வந்த ஆட்டோவை பார்க்கவில்லை. ஆனால், ஆட்டோமேலல்லாம் அவன் இடிக்க வில்லை, சாமார்த்தியமாக வண்டியை திருப்பிவிட்டான்!
ஆட்டோகாரன் சும்மா இருக்கவில்லை! "ஏண்டா, தே......யா பையா, நீ சாவ என் வண்டிதான் கெடச்சுதா?" . பைக் ஓட்டிக்கு இது பயங்கரமாய் சுட்டிருக்கவேண்டும் ! அப்படியே வண்டியை திருப்பி, ஆட்டோவிடம் வந்து, அந்த ஆட்டோகாரனை, கழுத்தை பிடித்து வெளியே இழுத்து, கீழே தள்ளி முகத்திலேயே மிதிக்க ஆரம்பித்தான். ஆட்டோகாரனும் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரத்தில் அங்கே கூட்டம் கூடி, ஆளாளுக்கு என்னாச்சு, என்னாச்சு என்று பேச தொடங்கினார்கள். பைக் ஓட்டி கூட வந்த பெண்ணும், கொஞ்ச நேரம் அவனை தடுத்து பார்த்தாள். பிறகு "இது வேலைக்கு ஆவாது" என்று அவளும் தூர போய் நின்று கொண்டாள். யாரோ ஒருவர் வந்து, விழுந்திருந்த பைக்கை நிமிர்த்திவைத்தார்.

என்னிடம் ஒருவர், "அங்க என்னாச்சு, 49 A பஸ் வருமா?", எனக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பொதுவாக , "தெரியல சார்" என்று சொல்லி வைத்தேன்.

"என்ன மனுஷா இவாளெல்லாம், இப்படி அடிச்சுக்கறா?", ஒரு கைத்தடி என்னிடம் வருத்தப்பட்டது.

"பின்னாடி பிகர் இருந்தா இப்படி தான் சீன் போடுவானுங்க," என்று இரண்டு
பேர், அங்கே இருந்தவள் தங்கையா, காதலியா என்று தெரியாமல் கூட பேசிகொண்டார்கள்!

நான் என்ன பண்ணிகொண்டிருந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்?

என்னுள் இருந்த "வேடிக்கை பார்க்கும்" சராசரி இந்தியனை நினைத்து கொண்டே
11 H
ஏறி வீடு வந்து சேர்ந்தேன்!





Tuesday, May 12, 2009

அம்மா என்றழைக்காத !



போன ஞாயிற்றுகிழமை காரில் போய் கொண்டிருந்தேன். அன்னையர் தினம் என்று எனக்கு நினைவே இல்லை. FM இல் "அம்மா" பாடல்களாகபோட்டு கொண்டிருந்தார்கள். அம்மா பாட்டு என்றால் அதிமுக பிரசார பாடல்கள் அல்ல! "அம்மா" பாட்டு, அவ்ளோதான்!

அப்போது
, அன்னையர் தின வாழ்த்து சொல்ல சாலமன் பாப்பையா பேசினார்.
"எங்க அம்மா என்னைய எப்பவுமே திட்டிடே இருக்கும். எது நான் செஞ்சாலும், பாராட்டவே மாட்டாங்க! கெளவி ஏன் இப்படி செய்யுது
னு நான் நெனப்பேன். ஆனா, என்னைய பத்தி மத்த ஆளுகளுங்க கிட்ட பெருமையா பேசும். அவிக சொல்றது கேட்டு சந்தோச படுமாம். அந்த ஆளுக சொல்ல நான் கேட்டுருக்கேன். படிப்பறிவு இல்லாத பொம்பளைக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சுனு தெரியல. எங்க தன் பையன் பெரும பேசுனா தலைகனம் ஏறிடும்னுதான், இந்த மனுசி பேசலயோ என்னவோ,", அவர் வட்டார வழக்கில் பேச பேச , எனக்கு லேசாய் என் அம்மா ஞாபகம் வந்தது. ஆனால் என் அம்மா , நான் சிரித்தால் சிரிப்பாள், நான் அழுதால் அழுவாள். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது, ஸ்கூலில் படிக்கும் போது. நான் எந்த போட்டியில் பங்கு பெற்றாலும், என் அம்மா அங்கே இருக்க வேண்டும். அதுவும், ஆரஞ்சு புடவையில் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் வேண்டும் என்றே தோற்று விடுவேன். இதற்காகவே, என் அம்மா வருவாள். என்னை பார்த்த படியே பெருமையாய் அமர்ந்திருப்பாள்.

எங்கோ
படித்த ஞாபகம், "அம்மாவை கடவுளாக பார்க்கலாமா?". பதில், இவ்வாறாக இருந்தது." அம்மா என்பவள் முதன்மையாக அன்பு செலுத்தவேண்டிய ஜீவனே அன்றி , கடவுள் அல்ல" என்று.

என் பார்வையில், இதற்கொரு சிறிய விளக்கம். ஆணின் உயிர்த்துளியை தாங்கி, நம் கண், காது, இதயம், பிறப்புறுப்பு , இன்ன பிற இத்யாதிகள் உருவாக துணைபுரிந்து, ஈன்றெடுத்து, படைப்பின் மொத்த சாராம்சமாய் விளங்குபவள் அம்மா! அவள் மீது அன்பு செலுத்துதல் என்று சுலபமாய் சொல்லி விட்டு போக முடியாது.
உன் வீட்டு நாய்க்கு கூடத்தான் நீ அன்பு செலுத்தலாம். ஆனால் ? அம்மா ?

உன்னை உருவாக்கியவளை, நீ உன் காலில் நிற்கும் வரை பாதுகாத்தவளை, அன்பு மட்டும் செலுத்தினால் போதாது. உன்னை கண்ணாய்பார்த்துகொண்டவளை, நீ கண்ணாடியாயாவது பார்த்துக்கொள்ள வேண்டாமா ?

முடிந்த
வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !



Saturday, May 9, 2009

புலனடக்கம்


என்ன அநியாயம்யா இது, ஓட்டு போட பணம் குடுத்துட்டு, நீ எனக்கு தான் ஓட்டு போடணும்னு மிரட்டறானுங்க!, இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார் !

எப்படி புஷ் , சதாம் உசேன தூக்குல போட்டரோ, அந்த மாதிரி ஒபாமா வந்து இவனுங்கள புடிச்சி தூக்குல போடணும் !

இப்ப பாத்தீங்கன்னா , அந்த காலத்துல சிவாஜி கூட நின்னாரு, எம்ஜார எதுத்து ஒரு ஓட்டு வாங்க முடிஞ்சுதா? அதுக்கு எல்லாம் , நல்ல மனசு வேணும்ங்க! இப்ப பாருங்க இந்த விஜயகாந்த், இவன்லாம் என்ன பண்ண போறான் ? பத்து எடத்துல நின்னு தோத்துத்தான் போக போறோம் னு தெரிஞ்சும், ஒண்ணு, ரெண்டு ஓட்டுக்காக எதுக்கு நிக்கணும்ங்கறேன்?

பஸ்ஸு டிகெட்டு விலைய இவனுங்க பாட்டுக்கு ஏத்திடறானுங்க , காய் கறி வெலையெல்லாம் தாறுமாறா ஏறுது! என்ன நடக்குது சார் இங்க ? இந்த கருணாநிதி ஆட்சிலாம் ஆட்சியா ?

நிறுத்துக..........

இதெல்லாம் நான் கேட்டது சென்னை மாநகர பேருந்து ஒன்றில்.

அய்யா, அரசியல் பேசும் புண்ணியவான்களே! நீங்கள் உங்கள் நண்பர் ஜமாவிலோ, அல்லது உங்களுகென்று இருக்கும் விவாத கூட்டத்திலோ இதெல்லாம் பேசுங்கள்! மக்கள் கூடும் பொது இடங்களில் வேண்டாமே ப்ளீஸ்! உங்கள் கருத்தை ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தால், பிரச்சனை இல்லை, மாற்று கருத்து கொண்டவர் உங்களுடன் பயணம் செய்தால் ??

அதனால், இடம் பொருள் ஏவல் அறிந்து அரசியல் பேசவும் . இது தேர்தல் சீசன் வேறு! வருகிறவன் போகிறவன் எல்லாம் அடிப்பான். கடைசியில் வடிவேல் மாதிரி 'அம்மே , அம்மே !' என்று முனகி கொண்டிருக்க வேண்டியதுதான்!


சந்தேக சதாசிவம் : எல்லாம் சரி! ஒபாமாவுக்கும் நம்மூர் உள்ளூர் தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம்? அவர எல்லாம் கூட்டிட்டு வந்து எதுக்கு இதுக்குள்ள இழுக்கணும்?